பஞ்சப்பள்ளி அருகே பெயிண்டர் அடித்துக்கொலையா?-உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
பஞ்சப்பள்ளி அருகே பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என புதைக்கப்பட்ட அவருடைய உடலை தாசில்தார் முன்னிலையில் போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
பாலக்கோடு:
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெயிண்டர்
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியை அடுத்த கும்மனூர் அருகே உள்ள பசிகம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 37). பெயிண்டர். இவருக்கு வைத்தீஸ்வரி (30) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் முரளி, சுந்தரம், முனுசாமி. நண்பர்களான பாண்டியன் உள்ளிட்ட 4 பேரும் ஓசூர், ராயக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு ஒன்றாக பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
பாண்டியனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது இனிமேல் மது குடிக்கக்கூடாது என டாக்டர்கள், அவருக்கு அறிவுறுத்தி இருந்தனர். தொடர்ந்து வேலைக்கு சென்ற பாண்டியன் நண்பர்களுடன் சேர்ந்து மீண்டும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
பரிதாப சாவு
கடந்த 30-ந்தேதி வயிற்று வலியால் துடித்த அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாரண்டஅள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாண்டியன் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். அவரது உடலை குடும்பத்தினர், உறவினர்கள் பசிகம் சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
இந்தநிலையில் பாண்டியனின் மனைவி வைத்தீஸ்வரி கணவரின் செல்போனை எடுத்து பார்த்த போது முரளி, சுந்தரம் ஆகியோருடன் பேசிய ஆடியோ பதிவாகி இருந்தது. அதில் 3 பேருக்கும் பணம் தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டு இருந்தது ஆடியோ மூலம் தெரியவந்தது. இதனால் பணத்திற்காக முரளி, சுந்தரம் ஆகியோர் தனது கணவரை அடித்துக்கொலை செய்திருக்கலாம் என வைத்தீஸ்வரி பஞ்சப்பள்ளி போலீசில் புகார் அளித்தார்.
உடல் தோண்டி எடுப்பு
அதன்பேரில் பாலக்கோடு தாசில்தார் அசோக்குமார், மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் ஆகியோர் முன்னிலையில் புதைக்கப்பட்ட பாண்டியனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் தர்மபுரி அரசு மருத்துவர் மதன்ராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து அவருடைய உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
பாண்டியன் இறந்தது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே பாண்டியன் பணத்திற்காக அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story