குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் உலா
பலாப்பழ சீசன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் உலா வருகின்றன.
குன்னூர்
பலாப்பழ சீசன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் காட்டு யானைகள் உலா
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையின் இரு புறங்களிலும் வனப்பகுதி மற்றும் தனியாருக்கு சொந்தமான தேயிலை, காபி தோட்டங்கள் உள்ளன. இங்கு ஊடுபயிராக பலா மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இந்த பகுதியில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை பலாப்பழ சீசன் நிலவி வருகிறது.
தற்போது சீசனையொட்டி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள் இந்த பகுதியில் முகாமிட்டு வருகின்றன. இதனால் காட்டு யானைகள் அடிக்கடி குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வருகின்றன.
வனத்துறையினர் எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடியதால் யானைகள் சாதாரணமாக சாலையை கடந்து வந்தன. இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு, பொதுபோக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதனால் வருகிற நாட்களில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் வாகன போக்குவரத்து அதிகரிக்கும். எனவே குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும். சாலையோரம் நிற்கும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story