கோத்தகிரியில் மரங்களில் ஏறி பேரிக்காய்களை ருசிக்கும் கரடிகள்
கோத்தகிரியில் மரங்களில் ஏறி பேரிக்காய்களை கரடிகள் ருசித்து வருகின்றன.
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டத்தில் ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்கள் மற்றும் ஆரஞ்சு, பேரிக்காய் மரங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது பேரிக்காய் சீசன் தொடங்கியுள்ளது. இதனால் கோத்தகிரி, தாந்தநாடு, அளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மரங்களில் பேரிக்காய்கள் காய்த்து குலுங்குகின்றன.
பேரிக்காய் கரடிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். இதனால் பேரிக்காய் மரங்களை நோக்கி கரடிகள் படையெடுத்து வருகின்றன. இந்த நிலையில் கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் இருந்து சக்திமலை வழியாக கிளப் ரோடு செல்லும் சாலையோரத்தில் உள்ள தனியார் தோட்டங்களுக்குள் கரடிகள் புகுந்து, பேரிக்காய் மரங்களில் ஏறி பேரிக்காய்களை ருசித்து தின்றன. இந்த காட்சியை அங்குள்ள தொழிலாளர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
இதேபோல தாந்தநாடு, அளக்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் பேரிக்காய் தோட்டங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். மேலும் தொழிலாளர்களை கரடிகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே தோட்டங்களுக்குள் புகும் கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story