ஆன்லைன் வகுப்பில் மாணவி பெயரில் ஆபாச படங்களை அனுப்பிய வாலிபர் கைது
ஆன்லைன் வகுப்பில் மாணவி பெயரில் ஆபாச படங்களை அனுப்பியதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:
ஆன்லைன் வகுப்பில் மாணவி பெயரில் ஆபாச படங்களை அனுப்பியதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆபாச படங்கள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பில் மாணவி ஒருவரின் பெயரில் வாலிபர் ஒருவர் இணைந்து அவர் தனது செல்போனிலிருந்து வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கும், பாடம் கற்கும் மாணவிகளுக்கும் ஆபாச செய்திகள் மற்றும் படங்களை அனுப்பி வந்துள்ளார்.
இதனையடுத்து ஆன்லைன் வகுப்பு குரூப்பில் இணைந்திருந்த, அந்த செல்போன் எண்ணை பள்ளி நிர்வாகம் நீக்கியது. இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் 29-ந் தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி சைபர் செல் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வாலிபர் கைது
இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி வீராச்சிகுப்பம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மோகன்குமார் (வயது26) என்பவர் பள்ளி ஆன்லைன் வகுப்பில் ஆபாச செய்தி மற்றும் படம் அனுப்பியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருவாரூர் சைபர் செல் போலீசார் மோகன்குமாரை கைது செய்தனர்.
பள்ளிகளில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளில் இது போன்று குற்றங்களில் யாராவது ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆன்லைன் வகுப்புகளின் போது பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு விழிப்புணர்வுடன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், முறையாக தணிக்கை செய்யவும் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அறிவுறுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story