மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் நடவடிக்கை
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திண்டிவனம்,
திண்டிவனத்தில் இருந்து ஓங்கூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து முக்கியமுள்ள இந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திண்டிவனத்தில் இருந்து ஓங்கூர் வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் நடைபெறாமல் தடுப்பது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்லூரி சாலை சந்திப்பு, சாரம், ஒலக்கூர், ஓங்கூர் உள்ளிட்ட முக்கிய இடங்களை ஆய்வு செய்த அவர், அங்கு விபத்துகளை தடுக்கும் வகையில் கூடுதலாக பேரி கார்டுகள்வைத்து கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் சீனிபாபு, தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
நடவடிக்கை
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சரியாக தூங்காமல் வாகனம் ஓட்டுவது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிக வேகமாக வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகள் நடைபெற்று வருகிறது. மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாகனங்களின் வேகத்தை குறைக்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள், ஒரு நம்பர் லாட்டரி விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story