பிச்சை எடுத்த 10 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய முதியவர்
பிச்சை எடுத்த 10 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய முதியவர்
ஆரல்வாய்மொழி,
உருமாறி வந்து உலகத்தையே ஆட்டி படைக்கும் கொரோனாவை கட்டுப்படுத்துவது கடும் சவாலாக இருந்து வருகிறது. உயிரை பறிக்கும் கொரோனா, ஏழை, எளிய மக்களின் வேலைக்கும் வேட்டு வைத்தது. நாட்டை ஆளும் அரசுக்கும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனை சமாளிக்க பொதுமக்கள், அரசுக்கு தாராளமாக நிதி வழங்கலாம் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்படி முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை தங்களுடைய பங்களிப்பாக பணம் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ஊர், ஊராக சென்று பிச்சை எடுத்த பணத்தில் 10 ஆயிரம் ரூபாயை முதியவர் ஒருவர் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளார். அவருடைய பெயர் பூல் பாண்டியன் (வயது 70). தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஊர், ஊராக சென்று பல வருடங்களாக பிச்சை எடுத்து வருகிறார்.
பிச்சை எடுத்தாவது கல்வி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கல்வியின் அவசியம் பற்றி பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வாக்கிற்கு ஏற்ப, பிச்சை எடுக்கும் பணத்தில் பல பள்ளிக்கூடங்களுக்கு பூல் பாண்டியன் செய்த உதவிகள் ஏராளம்.
சி.சி.டி.வி. கேமரா, சுத்திகரிப்பு குடிநீர், நாற்காலிகள் போன்றவற்றை பல பள்ளிகளுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். தற்போது முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு 10 ஆயிரம் ரூபாயை அனுப்பி உள்ளார். குமரி மாவட்டம் தோவாளையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூலம் பிச்சை எடுத்த பணத்தை அனுப்பி உள்ளார். கொரோனா முதல் அலையின் போதும், இதேபோல் பணம் அனுப்பியதாகவும் தெரிவித்தார். பேரிடர் சமயத்தில் அரசுக்கு பணம் அனுப்பியது சிறிய உதவியாக இருந்தாலும், அது தனக்கு ஆனந்தத்தை தருவதாக பூல் பாண்டியன் சொல்கிறார். அவருடைய பங்களிப்பை நாமும் பாராட்டுவோம்.
Related Tags :
Next Story