ஸ்கூட்டர் விபத்தில் பெண் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி


ஸ்கூட்டர் விபத்தில் பெண் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 5 July 2021 12:24 AM IST (Updated: 5 July 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த ஸ்கூட்டர் விபத்தில் பெண் என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த ஸ்கூட்டர் விபத்தில் பெண் என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 
பெண் என்ஜினீயர்
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த திட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஷெல்டன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அபிநயா (வயது 28).  என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார்.
அபிநயாவின் சொந்த ஊர் மேலசங்கரன்குழி அருகே பரப்புவிளை ஆகும். அபிநயாவின் தாயாரும், சகோதரியும் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை கவனித்து கொள்வதற்காக அபிநயா பரப்புவிளையில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்தார். 
விபத்தில் பலி
சம்பவத்தன்று தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரியை பார்க்க ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். பாம்பன்விளை பகுதியில் சென்றபோது, அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அபிநயாவின் ஸ்கூட்டர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து அபிநயாவின் சகோதரர் சபரீஷ் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
தக்கலை அருகே முத்தலக்குறிச்சி சாஸ்தாகோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (42), டெம்போ டிரைவர். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை நாகராஜ் தனது மனைவியின் ஸ்கூட்டரில் பெட்ரோல் நிரப்புவதற்காக திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
 தக்கலை தலைமை தபால் நிலையம் பகுதியில் சென்றபோது, எதிரே தூத்துக்குடியில் இருந்து பாமாயில் ஏற்றி வந்த டெம்போ திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நாகராஜ் ஓட்டி சென்ற ஸ்கூட்டர் மீது மோதி விட்டு அப்பகுதியில் உள்ள காம்பவுண்டு சுவரில் மோதி நின்றது.  
பலி
இந்த விபத்தில் நாகராஜ், லாரி சக்கரம், சுவர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை போலீசார் மற்றும் தக்கலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் டெம்போவை அப்புறப்படுத்தி நாகராஜின் உடலை மீட்டனர். இதற்கிடையே அங்கு வந்த நாகராஜின் மனைவியும், தாயாரும் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
கைது
பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போவை ஓட்டி வந்த நாகர்கோவில் வெள்ளமடம் பகுதியை சேர்ந்த ராஜா (36), என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்ததால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Next Story