போக்குவரத்து கழக பஸ்களில் 60 சதவீதம் வசூல் குறைந்தது


போக்குவரத்து கழக பஸ்களில் 60 சதவீதம் வசூல் குறைந்தது
x
தினத்தந்தி 5 July 2021 12:44 AM IST (Updated: 5 July 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் இலவச பயணத்தால் போக்குவரத்து கழக பஸ்களில் 60 சதவீதம் வசூல் குறைந்துள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விருதுநகர், 
பெண்கள் இலவச பயணத்தால் போக்குவரத்து கழக பஸ்களில் 60 சதவீதம் வசூல் குறைந்துள்ளது என  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 இலவச பயணம் 
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் போக்குவரத்துக்கழக சாதாரண கட்டண டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். மொத்தமுள்ள 200 டவுன் பஸ்களில் 167 டவுன் பஸ்களில் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த பஸ்களில் பெண்கள் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்ற ஸ்டிக்கர் பஸ்களின் முன்பக்கத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
ஆனாலும் வேறு சில பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வில்லை என்றாலும் பெண்கள் அந்த பஸ்களும் சாதாரண கட்டணம் டவுன் பஸ் என நினைத்து அந்த பஸ்சில் இலவச பயணம் செய்வதற்காக ஏறும் நிலை தொடர்கிறது. இதனால் போக்குவரத்து கழக ஊழியர் களுக்கும், பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் நிலையும் உள்ளது.
குறைந்தது 
கடந்த 28-ந் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து கழக பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.
அதிலும் இயக்கப்பட்டு வரும் டவுன் பஸ்களில் 80 சதவீத பஸ்கள் சாதாரண கட்டண டவுன் பஸ்களாக உள்ளதால் இந்த பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து கழகத்திற்கு 60 சதவீதம் வசூல் குறைந்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 அவர் மேலும் கூறியதாவது:-
 ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டவுடன் அனைத்து பஸ்களிலும் பெண்கள் பயணம் செய்வது அதிகரித்துள்ளது. போக்குவரத்துகழக வருமானம் 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு 
 இதற்கு முன்பு கடந்த காலங்களில் தினசரி விருதுநகர் போக்குவரத்து கழகத்தில் ரூ.10 லட்சம் வசூல் ஆகி வந்த நிலையில் தற்போது ரூ.4 லட்சம் மட்டுமே வசூல் ஆகி வருகிறது. ஆனாலும் அரசு உத்தரவை அமல்படுத்துவதில் போக்குவரத்து கழக நிர்வாகம் தெளிவாக உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போக்குவரத்துக்கழக டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பஸ்களிலும் மினி பஸ்களிலும் பெண்கள் பயணம் செய்வது வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தனியார் மற்றும் மினி பஸ் நிர்வாகத்தினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story