காங்கிரசுக்கு கூடுதல் சக்தி தேவைப்படுவதால் கட்சியை விட்டு சென்றவர்களை டி.கே.சிவக்குமார் அழைக்கிறார் - மந்திரி பசவராஜ் பொம்மை சொல்கிறார்


காங்கிரசுக்கு கூடுதல் சக்தி தேவைப்படுவதால் கட்சியை விட்டு சென்றவர்களை டி.கே.சிவக்குமார் அழைக்கிறார் - மந்திரி பசவராஜ் பொம்மை சொல்கிறார்
x
தினத்தந்தி 5 July 2021 1:09 AM IST (Updated: 5 July 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசுக்கு கூடுதல் சக்தி தேவைப்படுவதால் கட்சியை விட்டு சென்றவர்களை மீண்டும் சேர்க்க டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார் என்று மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

17 பேர் கட்சியில் சேரலாம்

  கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவுக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் திட்டமிட்டுள்ளார். இதற்காக கட்சியை விட்டு விலகி சென்றவர்கள், மீண்டும் காங்கிரசில் சேர விண்ணப்பிக்கலாம் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

  இதுகுறித்து மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

காங்கிரசுக்கு சக்தி தேவைப்படுகிறது

  காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், வேறு கட்சிகளை சேர்ந்த யாராக இருந்தாலும், காங்கிரசில் சேரலாம் என்று கூறியுள்ளார். இது அவரது கட்சியின் விவகாரம். அதுபற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றே தீருவோம் என்று கூறி வருகிறார்கள். இதற்காக காங்கிரஸ் கட்சிக்கு சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்திக்காக தான் கட்சியை விட்டு சென்றவர்கள் மீண்டும் சேரலாம் என்று டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசு, கர்நாடகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.5,500 கோடி நிதியை, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தடுத்து விட்டதாக சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

  மத்திய அரசு, கர்நாடகத்திற்கு நிதி வழங்க வேண்டி இருப்பது உண்மை தான். அந்த நிதியை ஒதுக்கும்படி மத்திய அரசுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த செஸ் வரியை மாநில அரசு குறைக்கலாம் என்று மத்திய நிதி மந்திரி கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும். அதன்பிறகு, ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதால் இந்த விவகாரத்தில் ஒருமித்த முடிவு எடுப்பது சிறந்ததாக இருக்கும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story