கொரோனா 3-வது அலையில் இருந்து தப்பிக்க 3 மாதத்தில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி - டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்
கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையில் இருந்து தப்பிக்க 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று அரசுக்கு, காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை முடியும் தருவாயில் உள்ளது. கொரோனா 3-வது அலை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 3-வது அலை உருவாக இன்னும் 3 மாதங்கள் உள்ளன. இந்த 3 மாதத்திற்குள் கர்நாடகத்தில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அரசு முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் 3-வது அலையில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும்.
அதனால் செப்டம்பர் மாத இறுதிக்குள் 80 சதவீதம் பேருக்கு 2 தவணை தடுப்பூசி போட்டு முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தடுப்பூசி போடுவதன் மூலம் கொரோனா 3-வது அலையின் தீவிரத்தை கட்டுக்குள் கொண்டு வரமுடியும். இன்னும் 3 மாதத்திற்குள் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட முடியுமா?, அதற்கு அரசு தயாராக உள்ளதா? என்பதை அரசு தான் தெரிவிக்க வேண்டும்.
அரசே முழு பொறுப்பு
கொரோனா தடுப்பூசி பற்றி பா.ஜனதா தலைவர்கள் வெறும் வாய் வார்த்தையில் மட்டுமே பேசி வருகின்றனர். மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. மக்கள் மணிக்கணக்கில் ஆஸ்பத்திரிகள் முன்பாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டினாலும், தட்டுப்பாடு காரணமாக மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. 3-வது அலையில் மாநிலத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதற்கு அரசே முழு பொறுப்பாகும்.
வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு நமது நாட்டு மக்களுக்கு முதலில் தடுப்பூசி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகர்நாடக மாவட்டங்களில் மக்களுக்கு தடுப்பூசி போடும் விவகாரத்தில் கர்நாடக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. அந்த மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை.
1 லட்சம் பேருக்கு இலவசமாக...
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து இதுவரை 1 லட்சம் பேருக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுள்ளனர். மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் நிதியை பயன்படுத்தும்படி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுபற்றி அரசு கண்டுகொள்ளவில்லை.
தடுப்பூசி போட்டு கொள்ளும்படி அனைத்து தரப்பு மக்களுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் கூறி வருவதால், இந்த விவகாரத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான முன் ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story