பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் வீரமரணம்: விஜயாப்புரா ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
புல்வாமாவில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் வீரமரணம் அடைந்த, விஜயாப்புராவை சேர்ந்த ராணுவ வீரர் உடல் அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
விஜயாப்புரா:
துப்பாக்கி சண்டையில் வீரமரணம்
விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடி தாலுகா உக்காலி கிராமத்தை சேர்ந்தவர் காசிராயா பொம்மனஹள்ளி. இவருக்கு திருமணம் முடிந்து சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். ராணுவ வீரரான காசிராயா ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு புல்வாமாவில் ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சண்டையில் காசிராயா, பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுபற்றி ராணுவ அதிகாரிகள் காசிராயாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து இருந்தனர்.
இதைக்கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் காசிராயா இறந்த தகவல் அறிந்ததும் உக்காலி கிராமமே சோகத்தில் மூழ்கியது. பின்னர் காசிராயாவின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் கிராம மக்கள் செய்து வந்தனர். இந்த நிலையில் காசிராயாவின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பெங்களூருவில் இருந்து காசிராயாவின் உடல் அவரது சொந்த ஊரான விஜயாப்புராவில் உள்ள உக்காலி கிராமத்துக்கு ராணுவ வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.
மலர் வளையம் வைத்து அஞ்சலி
இந்த நிலையில் உக்காலி கிராமத்துக்கு சென்ற ராணுவ வாகனத்தில் இருந்த காசிராயாவின் உடல் இறக்கப்பட்டு, கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அப்போது ராணுவ வீரர்கள் காசிராயா உடல் மீது தேசிய கொடியை போர்த்தி இறுதி அஞ்சலியும், மரியாதையும் செலுத்தினர். பின்னர் கிராம மக்கள் திரண்டு வந்து காசிராயாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது காசிராயாவின் உடலை பார்த்து அவரது மனைவி சங்கீதா மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டு இருந்த காசிராயாவின் உடலை பார்த்து சங்கீதா கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. இதன்பின்னர் அரசு பள்ளியில் இருந்து காசிராயாவின் உடல் கிராமத்தில் உள்ள மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது காசிராயா உடலில் போர்த்தப்பட்டு இருந்த தேசிய கொடியை அவரது மனைவி சங்கீதாவிடம், ராணுவ வீரர்கள் ஒப்படைத்தனர். அதை கண்ணீர்மல்க சங்கீதா பெற்றுக் கொண்டார்.
21 குண்டுகள் முழங்க...
பின்னர் லிங்காயத் சமூக முறைப்படி காசிராயாவின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. இதன்பின்னர் காசிராயாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி 21 குண்டுகளை சுட்டனர்.
இதில் மடாதிபதி குருசங்கனபசவ சீனிவாஸ், பசவனபாகேவாடி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவானந்த பட்டீல், கலெக்டர் சுனில்குமார், போலீஸ் சூப்பிரண்டு அனுபம் அகர்வால் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மகனையும் ராணுவ வீரன் ஆக்குவேன்
புல்வாமாவில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் காசிராயா வீரமரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டு இருந்த காசிராயா உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி தேற்றினர்.
அப்போது நிருபர்களிடம் சங்கீதா கூறும்போது, ‘‘நாட்டுக்காக எனது கணவர் உயிர்த்தியாகம் செய்து உள்ளார். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். எனது கணவர் போல எனது மகனையும் ராணுவ வீரன் ஆக்குவேன். பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும்’’ என்றார்.
Related Tags :
Next Story