தீபாவளி பண்டிகைக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது: முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு 1½ டன் ஆவின் இனிப்பு வழங்கியவர்கள் மீது நடவடிக்கை -பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் பேட்டி
கடந்த தீபாவளி பண்டிகையன்று முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு 1½ டன் ஆவின் இனிப்பை இலவசமாக வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் கூறியுள்ளார்.
சேலம்:
கடந்த தீபாவளி பண்டிகையன்று முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு 1½ டன் ஆவின் இனிப்பை இலவசமாக வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் கூறியுள்ளார்.
பால்வளத்துறை அமைச்சர்
சேலத்துக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நேற்று வந்தார். அவர், அஸ்தம்பட்டி, 5 ரோடு, மெய்யனூர், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பால் முகவர்களிடம் பால் வரத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் 5 ரோட்டில் உள்ள ஆவின் நிலையத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார். அங்கு அதிகாரிகளிடம் ஆவின் விற்பனை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் ஆவின்பால் விற்பனை ஒரு லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் அதிகரித்து உள்ளது.
234 பேர் மீது நடவடிக்கை
தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி தற்போது பால் விலை குறைக்கப்பட்டு உள்ளது. இந்த விலை குறைப்பால் அரசுக்கு ரூ.270 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும் மக்கள் நலன் கருதி இந்த விலை குறைப்பு நஷ்டத்தை அரசு சமாளித்து வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆவின் நிறுவனத்திற்கு ஊழியர்கள் நியமனம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளன. குறிப்பாக 234 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை பணி நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.
மேலும் முதுநிலை, இளநிலை பணியாளர்கள் 636 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அந்த நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சத்துணவில் பால் வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்.
முன்னாள் அமைச்சர்
ஆவின் நிறுவனத்தில் வேலை பார்த்த 48 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்கப்படும். சென்னையில் பால் விலையை குறைக்காமல் பழைய விலையிலேயே விற்று வந்த 22 பால் நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 25 பால் ஒன்றியங்களில் முறைகேடு நடந்து உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
சேலம் ஆவின் பால் பண்ணையில் தனியாக ஐஸ்கிரீம் பிளான்ட் அமைப்பதற்கான அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் வெளியிடப்படும். முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வீட்டுக்கு கடந்த தீபாவளி பண்டிகையன்று 1½ டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கு இன்னும் பணம் செலுத்தவில்லை. இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
விசாரணை
ஆவின் நிறுவனத்திற்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். கடந்த ஆட்சியில் சேலம் ஆவின் பால் டேங்கர் வாடகை ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்து உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் ஆவடி நாசர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம், பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆவின் பொதுமேலாளர் நிர்மலாதேவி, தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் வெண்ணிலா சேகர், பாரப்பட்டி சுரேஷ்குமார், மாணிக்கம், சேலத்தாம்பட்டி ராஜேந்திரன், ஆறுமுகம் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story