பொது போக்குவரத்துக்கு அனுமதி: சேலத்தில் இன்று முதல் பஸ்களை இயக்க ஏற்பாடு- புதிய பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்


பொது போக்குவரத்துக்கு அனுமதி: சேலத்தில் இன்று முதல் பஸ்களை இயக்க ஏற்பாடு- புதிய பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 5 July 2021 1:56 AM IST (Updated: 5 July 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சேலத்தில் இன்று முதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்தது.

சேலம்:
பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சேலத்தில் இன்று முதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்தது.
போக்குவரத்துக்கு அனுமதி
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் சேலம் மாவட்டத்திலும் அரசு அறிவித்த தளர்வுகள்படி இன்று (திங்கட்கிழமை) முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சேலம் மாவட்டத்தில் இன்று முதல் 50 சதவீத பயணிகளுடன் மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டமும் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பஸ்களை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
புதிய பஸ்நிலையம்
இந்த நிலையில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது பஸ் நிலையம் முழுவதும் மாநகராட்சி ஊழியர்களால் நேற்று கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் பஸ் நிலையம் முழுவதும் சுத்தம் செய்யும் பணியும் நடந்தது. 
சேலம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் பஸ்களை இயக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். டிரைவர், கண்டக்டர்கள் மட்டுமின்றி பயணிகளும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள கொரோனா விதிகளை டிரைவர், கண்டக்டர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
புதிய பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொரோனா விதிகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் ஆணையாளர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர் சண்முக வடிவேல், சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளர் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story