பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி


பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 5 July 2021 1:56 AM IST (Updated: 5 July 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று முதல் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதையொட்டி தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மீன்சுருட்டி:

பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இக்கோவிலில் வெளிநாடு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்களும் வந்து செல்வார்கள்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழக அரசின் சார்பில் பல்வேறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா பரவலை தடுக்க வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோவில்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன.
தூய்மை பணிகள்
அதன்படி மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலிலும் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வழக்கம்போல் சாமிக்கு நடைபெறும் ஆறுகால பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று(திங்கட்கிழமை) முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த ஒரு வார காலமாகவே பிரகதீஸ்வரர் கோவிலில் தூய்மை பணிகள் நடைபெற்றது. இதில் கோவில் முழுவதும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, புல்வெளிகள் மற்றும் பூச்செடிகள் வெட்டி சரி செய்யப்பட்டன.
முககவசம் அணிந்து...
மேலும் கோவிலில் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி இன்று முதல் பிரகதீஸ்வரர் கோவில் திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முககவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முககவசம் இல்லாமல் வரும் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

Next Story