அரசு பஸ்களில் அதிகமாக ஏற்றப்படும் பயணிகள்


அரசு பஸ்களில் அதிகமாக ஏற்றப்படும் பயணிகள்
x
தினத்தந்தி 5 July 2021 2:19 AM IST (Updated: 5 July 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

விதிமுறைகளை மீறி பெரம்பலூரில் அரசு பஸ்களில் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்படுவதால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பெரம்பலூர்:

50 சதவீதத்துக்கு மேல்...
கொரோனா வைரஸ் 2-ம் அலையின் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது சில தளர்வுகளுடன் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பஸ்களில் கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால் பெரம்பலூரில் இருந்தும், பெரம்பலூர் வழியாகவும் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்களில் 50 சதவீதத்துக்கு மேல் பயணிகள் ஏற்றப்பட்டு வருகின்றனர்.
கொரோனா அதிகரிக்க வாய்ப்பு
அவர்களில் சிலர் முககவசம் கூட அணிவதில்லை. பெரம்பலூர் வழியாக சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பயணிகள் நின்றபடியும் பயணிக்கின்றனர். தற்போது தான் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்பும் குறைந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் அரசு பஸ்களில் அரசு அனுமதித்த அளவை விட அதிகளவு பயணிகளை ஏற்றுவதால் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பஸ்களில் 50 சதவீத பயணிகளை ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story