7 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு
7 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது.
வேப்பந்தட்டை:
குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்தனர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த ஆண்டு மழை பெய்தபோது நீர் நிரம்பியது. இதனால் உள்நாட்டு மீனவர் சங்கம் சார்பில் ஏரியில் மீன் வளர்ப்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் குத்தகைக்கு பதிவு செய்து ஏலம் எடுத்தனர்.
பின்னர் இந்த ஏரியில் லட்சக்கணக்கான மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தனர். மேலும் கடந்த ஒரு மாதமாக மீன்களை பிடித்து விற்பனை செய்தனர். இருப்பினும் ஏரியில் பெருமளவு மீன்கள் பிடிக்கப்படாமல் உள்ளன.
மீன்பிடி திருவிழா என வதந்தி
இந்நிலையில் நேற்று அரும்பாவூர் பெரிய ஏரியில் மீன் பிடி திருவிழா நடைபெறுவதாக மர்ம நபர்கள் வதந்தி பரப்பினர். இதனை நம்பி அரும்பாவூர், பூலாம்பாடி, தொண்டமாந்துறை, பெரியம்மாபாளையம் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து ஏரியில் திடீரென இறங்கி சமூக இடைவெளியில்லாமல் மீன் பிடிக்க தொடங்கினர். இதனை கண்ட குத்தகை எடுத்த மீனவர் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து குத்தகைதாரர்கள், மீன் பிடிக்க வந்த பொதுமக்களிடம் இன்னும் முழுமையாக மீன் பிடிக்கவில்லை. எனவே யாரும் அங்கு மீன் பிடிக்கக்கூடாது என்று கூறினார்கள். ஆனால் அதனை பொதுமக்கள் யாரும் கேட்காமல், ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர்.
தீ வைத்து கொளுத்தப்பட்டன
அப்போது மீன்பிடிக்க வந்தவர்களின் மோட்டார் சைக்கிள்கள் ஏராளமாக ஏரிக்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன. அதில் சில மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள். அவை கொழுந்துவிட்டு எரிந்தன.
இதில் பூலாம்பாடியைச் சேர்ந்த சந்துரு, பெரியண்ணன், செல்வகுமார், அரும்பாவூர் ஆனந்த், பெரியம்மாபாளையம் தேவா, தொண்டமாந்துறை முருகேசன், சேலம் மாவட்டம் வீரகனூர் மாதேஸ்வரன் ஆகிய 7 பேருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள்கள் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சியளித்தது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரும்பாவூர் போலீசார், ஒலிபெருக்கி மூலம் ஏரியில் யாரும் மீன் பிடிக்கக்கூடாது என்று அறிவித்து, மீன்பிடித்த பொதுமக்களை கலைந்து போகச்செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, கூடுதல் சூப்பிரண்டு நீதிராஜ், துணை சூப்பிரண்டு சரவணன், அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? மீன்பிடித் திருவிழா நடைபெறுகிறது என்று வதந்தி பரப்பியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story