குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 July 2021 2:36 AM IST (Updated: 5 July 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குன்னம்:

குடிநீர் கிடைக்கவில்லை
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஆய்க்குடி கிராமத்தில் உள்ள காலனி தெருவின் கிழக்குப்பகுதிக்கு கடந்த 15 நாட்களாக சரிவர குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், எங்கள் பகுதிக்கு வரும் குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சி எடுத்து விடுவதால், குடிநீர் வந்து சேர்வது இல்லை.
எனவே ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு, குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கள்ளம்புதூர்- எழும்பூர் செல்லும் சாலையில் உள்ள ஆய்க்குடி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
போக்குவரத்து தடைபட்டது
இது பற்றி தகவல் அறிந்த எழும்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ரகுபதி சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் குழாயில் மின்மோட்டார் பொருத்தப்பட்ட வீடுகளில் கண்டுபிடித்து மின்மோட்டார் அகற்றப்படும் என்றும், குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்ததின்பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மேலும் மங்களமேடு போலீசார் போக்குவரத்தை ஏற்படுத்தினர். மறியலால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பஸ் போக்குவரத்து தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story