ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் பகுதிகளில் பலத்த மழை
ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
ஜெயங்கொண்டம்:
பலத்த மழை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்த வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இடையில் இரவு நேரத்தில் மழை பெய்தது. நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலையில் வெயிலின் தாக்கம் லேசாக குறைந்தது. மதியம் 3 மணி முதலே வானம் லேசாக இருண்டு காணப்பட்டது. 3 மணிக்கு பின்னர் திடீரென இடி, மின்னல், பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஆரம்பத்தில் மிதமாக பெய்த மழையானது, பின்னர் வேகம் அதிகரித்து பலத்த காற்றுடன் கூடிய கன மழையாக மாறி சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது.
பின்னர் இடைவெளிவிட்டு இரவு 8 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்தது. இதில் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைத்த நிலையில் ஜெயங்கொண்டத்தில் கொட்டி தீர்த்த மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மின் இணைப்பு துண்டிப்பு
இதற்கிடையே மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் மின்ம்பிகளில் சாய்ந்து கிடந்ததால் ஆங்காங்கே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதிகளை மின்வாரிய ஊழியர்கள் கண்டறிந்து, மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி பின்னர் மின் இணைப்பு கொடுத்தனர். ஜெயங்கொண்டம் நகர் முழுவதும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளில் மின்கம்பி செல்லும் பாதைகளில் மரக்கிளைகள் இருந்தால் அவற்றை மின்வாரிய ஊழியர்களின் ஆலோசனையுடன் அப்புறப்படுத்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உடையார்பாளையம், தா.பழூர்
இதேபோல் உடையார்பாலையம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் வானில் கருமேகம் சூழ்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் உடையார்பாளையம் மற்றும் கழுமங்கலம், முனையதரையன்பட்டி, கச்சிபெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், இலமங்கலம், சோழன்குறிச்சி, தத்தனூர், மனகதி, வெண்மான்கொண்டான், விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தா.பழூரில் நேற்று பகல் முழுவதும் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் மாலை 6 மணி அளவில் திடீரென வானில் மேகங்கள் திரண்டன. பின்னர் சிறிது நேரம் குளிர்ந்த காற்று வீசியது. இரவு 8 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னலுடன் பெய்த மழை படிப்படியாக வேகம் குறைந்தது. மழையால் சுற்றுப்புறம் குளிர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story