தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துமத வழிபாட்டு தலங்களும் திறப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துமத வழிபாட்டு தலங்களும் திறப்பு
x
தினத்தந்தி 5 July 2021 5:13 PM IST (Updated: 5 July 2021 5:13 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து மத வழிபாட்டு கூடங்களும் திறக்கப்பட்டன

தூத்துக்குடி:
கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. பக்தர்கள் தரிசனுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து விதமான மக்கள் கூடும் இடங்களும் மூடப்பட்டன. அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. தற்போது கொரோனா குறைந்து வருவதால், படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.
கோவில்கள் திறப்பு
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் நேற்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டன. கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றும் வகையில் அனைவரும் முககவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர். சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக வட்டங்கள் வரையப்பட்டு உள்ளன. தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பனிமயமாதா ஆலயம்
இதே போன்று தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்திலும் நேற்று காலை முதல் பிரார்த்தனைகள் நடந்தன. பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்கு ஒரு நேரத்தில் 30 பேருக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அவர்கள் மட்டும் அந்த பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். ஆலயத்தில் சமூக இடைவெளி மற்றும் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. இதேபோன்று அனைத்து ஆலயங்களும் நேற்று திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் சுமார் 70 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் அனுமதிக் கப்பட்டனர். பல்வேறு வழிகாட்டு நெறி முறைகள் அறிவிக்கப் பட்டு கோவில் நிர்வாக அதிகாரி சிவகலைப் பிரியா ஏற்பாட்டில் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேன் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யவும், கிருமி நாசினி தெளிக்கப் பட்டு, முகக்கவசம் அணிந்த பக்தர்கள், சமூக இடைவெளி யைகடை பிடித்து அனுமதிக் கப்பட்டனர். நேற்று காலை வழக்கம் போல் அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டது. இதனை தொடர்ந்து திருவனந்தல் பூஜையும், சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் விழா பூஜைகள் நடத்தப் பட்ட பின்னர் காலை 8.30 மணிமுதல் 11 மணி வரை பக்தர்கள் அனுமதிக் கப்பட்டனர். பக்தர்கள் தேங்காய், பழம், மாலை பூஜைக்கு கொடுத்து அர்ச்சனை செய்ய அனுமதி அளிக்கப் படவில்லை. இதைதொடர்ந்து பக்தர்கள் சாமி, அம்பாளை தரிசனம் செய்ய ஆர்வத்துடன் சென்றனர். பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் மட்டும் கொடுக்க ப்பட்டது. கோவில் வெளிப் புறம் மற்றும் உள்புறங்களில் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்கப் பட்டது. இதே போல் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டார்கள். கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. கோவில் வளாகத்தில் உள்ள தேங்காய், பழம், பூ கடைகளில் விற்பனை இல்லை.

Next Story