கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்; செடிகளில் சிரித்த பூக்களை ரசித்து உற்சாகம்
நீண்ட நாட்களுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டதால், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். செடிகளில் சிரித்த பூக்களை பார்த்து ரசித்து உற்சாகம் அடைந்தனர்.
கொடைக்கானல்:
நீண்ட நாட்களுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டதால், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். செடிகளில் சிரித்த பூக்களை பார்த்து ரசித்து உற்சாகம் அடைந்தனர்.
விழிகளுக்கு விருந்து
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். சிறந்த கோடைவாசஸ்தலமான இங்கு, விழிகளுக்கு விருந்து படைக்கும் ஏராளமான இடங்கள் உள்ளன.
பழங்கள் பழுத்து கிடக்கும் மரங்களை தேடிச்செல்லும் பறவைகளை போல, கோடை வெப்பம் தாங்காமல் கொடைக்கானலை நாடி வரும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் உள்ளனர்.
கொலைவெறி பிடித்த கொரோனா, மனித உயிர்களை மட்டும் வேட்டையாட வில்லை. இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண முடியாமல் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கும் தடை போட்டு விட்டது கொரோனா.
சுற்றுலா பயணிகள் உற்சாகம்
கொரோனா பரவல் எதிரொலியாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு இ-பாஸ் பெற்று கொடைக்கானல் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
தொற்று குறைந்ததால் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இது, கொடைக்கானலுக்கு செல்ல எப்போது அனுமதி கிடைக்கும் என்று ஏங்கி கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
அதிகாலையில் இருந்தே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு, மலைகளின் இளவரசி களை கட்ட தொடங்கி விட்டாள். கொடைக்கானல் நகரின் பல்வேறு சாலைகளில், வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து சென்றன.
பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
இதற்கிடையே சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா, ரோஜாபூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவை காலை 9 மணிக்கு திறக்கப்பட்டது.
முதன் முதலாக பூங்காவுக்குள் அடியெடுத்து வைத்த சுற்றுலா பயணிகளுக்கு பூங்கொத்து கொடுத்து ஊழியர்கள் வரவேற்றனர். அதன்படி பிரையண்ட் பூங்காவுக்கு முதலில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு தோட்டக்கலைத்துறை அலுவலர் சிவபாலன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பூத்துக்குலுங்கிய பூக்கள்
இதேபோல் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பல்வேறு வண்ணப்பூக்கள் பூங்காக்களில் பூத்துக்குலுங்கின. நீண்ட நாட்களுக்கு பிறகு செடிகளில் சிரித்த பூக்களை பார்த்த மகிழ்ச்சியில், சுற்றுலா பயணிகள் புத்துணர்வு அடைந்தனர்.
மாலை 5 மணி வரை திறக்கப்பட்டிருந்த பிரையண்ட் பூங்காவை, 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இனிவருங்காலத்தில் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொடைக்கானல் ஏரிச்சாலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த 500-க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டன. அங்கு வியாபாரம் சூடு பிடித்தது.
படகு சவாரி எப்போது?
கொடைக்கானல் என்றவுடன் சுற்றுலா பயணிகளின் மனதில் நீங்காத இடம் பிடிப்பது அங்குள்ள நட்சத்திர ஏரி தான். அந்த ஏரியில் படகு சவாரி செய்வதில் சுற்றுலா பயணிகள் அலாதி பிரியம் கொள்வர்.
ஆனால் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது, சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. படகு சவாரி எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.
இதேபோல் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்கள் திறக்கப்படவில்லை. இதனால் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் ஒரே நாளில் திரும்பி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களையும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குறிஞ்சி ஆண்டவர் கோவில்
இதனிடையே கொடைக்கானல் நகரில் பிரசித்தி பெற்ற குறிஞ்சி ஆண்டவர் கோவில், மூஞ்சிக்கல் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நகரில் உள்ள தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை திறக்கப்பட்டன. அங்கு பிரார்த்தனை, தொழுகை நடைபெற்றது. வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story