அரூர் பகுதியில் தொடர் மழையால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை
அரூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர்:
அரூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மழை
தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த சிட்லிங் அருகே கல்வராயன் மலை அடிவாரத்தில் இருந்து கல்லாறு உருவாகிறது. இந்த கல்லாறு சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பெரியப்பட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. தொடர்ந்து அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையை சென்றடைகிறது. இந்த கல்லாற்றில் ஆண்டுக்கு 3 முதல் 5 முறை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டம் அரூர், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங், சித்தேரி உள்ளிட்ட மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை அரூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் நரிப்பள்ளியில் உள்ள கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தடுப்பணை
இந்த மழைநீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து, சாத்தனூர் அணைக்கு சென்றது. இந்த கல்லாற்றில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன ஆனால் தடுப்பணைகளின் உயரம் குறைவாக இருப்பதால், மழைநீர் தேக்கி வைக்க முடியாமல் சாத்தனூர் அணைக்கு செல்கிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அரூர், கல்வராயன் மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் அரூர் அருகே உள்ள கல்லாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரூர் பகுதியில் பருவமழை பொய்த்து போனதால் ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து, தண்ணீரை தேக்கி வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story