ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு: பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில்கள் திறப்பு ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு அறிவிக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக கோவில்கள் திறக்கப்பட்டன. ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி அளிக்கப்பட்டது.
தர்மபுரி:
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு அறிவிக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக கோவில்கள் திறக்கப்பட்டன. ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி அளிக்கப்பட்டது.
கட்டுப்பாடுகள்
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று குறைந்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கடைகளை திறக்கும் நேரம் கூடுதலாக வழங்கப்பட்டது. மேலும் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன. சுமார் 60 நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டதால் காலையிலேயே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி சாலை விநாயகர் கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில், கோட்டை பரவாசுதேவ சாமி கோவில், கல்யாண காமாட்சி உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் காலை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள், பள்ளி வாசல்கள் திறக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை, தொழுகை நடந்தது.
அமர்ந்து சாப்பிட அனுமதி
இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் ஓட்டல்கள், தேனீர் கடைகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டன. ஓட்டல்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் பெரும்பாலான ஓட்டல்களில் அரசின் விதிமுறைகளை பின்பற்றி வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டனர். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஊர்களிலும் இந்த நடைமுறைகள் அமலுக்கு வந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் காலை முதல் செல்ல தொடங்கின. இதில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும் சென்றனர். மேலும் கல்லூரி மாணவ-மாணவிகள் சேர்க்கை தொடர்பான விவரங்களை பெற பெற்றோர்களுடன் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story