திருப்பூர் அருகே காரில் 48 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அருகே காரில் 48 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்
திருப்பூர் அருகே காரில் 48 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாகன தணிக்கை
பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் வெளிமாவட்ட தொழிலாளர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் கஞ்சா விற்பனை அதிகம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோவை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையிலான தனிப்படையினர், ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று காலை திருப்பூர் அருகே பல்லடம் ரோடு சின்னக்கரை பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
48 கிலோ கஞ்சா பறிமுதல்
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் பண்டல் பண்டல்களாக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த காரில் இருந்து மொத்தம் 48 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.
இது தொடர்பாக அந்த காரில் வந்த திருப்பூரை அடுத்த இடுவாயை சேர்ந்த அலெக்ஸ் (வயது 33), தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் சேர்ந்த செல்வம் (41) ஆகிய 2 பேரை பிடித்தனர். இவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை மொத்தமாக தேனிக்கு கடத்தி வந்து, பின்னர் அங்கிருந்து கார் மூலமாக திருப்பூருக்கு கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.
2 பேர் கைது
கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் இது தொடர்பாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து அலெக்ஸ், செல்வம் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய தேனியை சேர்ந்த மகேஷ் என்பவரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். திருப்பூர் அருகே காரில் 48 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story