வேடசந்தூர் அருகே தொழிலாளியின் ஏ.டி.எம். கார்டை அபேஸ் செய்து பணம் திருட்டு


வேடசந்தூர் அருகே தொழிலாளியின் ஏ.டி.எம். கார்டை அபேஸ் செய்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 5 July 2021 9:44 PM IST (Updated: 5 July 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே தொழிலாளியின் ஏ.டி.எம். கார்டை அபேஸ் செய்து பணம் திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியை சேர்ந்தவர் ஓமன்ந்த் (வயது 57). கூலித்தொழிலாளி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேடசந்தூரில் கரூர் சாலையில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம், தனக்கு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து தருமாறு ஓமன்ந்த் கூறியுள்ளார். இதையடுத்து அந்த வாலிபரும், ஓமன்ந்தின் ஏ.டி.எம். கார்டை வைத்து ரூ.5 ஆயிரம் எடுத்து கொடுத்தார். அப்போது அந்த வாலிபர் ஓமன்ந்த் ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டதுடன், அவரது ஏ.டி.எம். கார்டை அபேஸ் செய்தார். மேலும் அதேபோன்ற போலி ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்தார். இதனை அறியாத ஓமன்ந்த் வீட்டிற்கு சென்றுவிட்டார்
இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி ஓமன்ந்த் ஏ.டி.எம். கார்டை வைத்து மீண்டும் பணம் எடுக்க முயன்றார். அப்போது அவரால் அந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்த முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து வங்கிக்கு சென்று கேட்டு பார்த்தார். அப்போது அவர் வைத்திருந்தது போலி ஏ.டி.எம். கார்டு என்பது தெரியவந்தது. மேலும் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரத்தை ஏ.டி.எம். கார்டு மூலம் எடுத்ததாகவும் வங்கி சார்பில் விவரம் தெரிவிக்கப்பட்டது. அப்போது தான், உதவுவது போல் நடித்து அந்த வாலிபர் ஏ.டி.எம். கார்டை அபேஸ் செய்து பணத்தை திருடியது ஓமன்ந்துக்கு தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து அவர் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story