மயிலாடுதுறையில், ஊரடங்கு தளர்வுகளின்படி மதுக்கடைகள் திறப்பு: சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து, மது வாங்கிச்சென்ற மதுப்பிரியர்


மயிலாடுதுறையில், ஊரடங்கு தளர்வுகளின்படி மதுக்கடைகள் திறப்பு: சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து, மது வாங்கிச்சென்ற மதுப்பிரியர்
x
தினத்தந்தி 5 July 2021 9:53 PM IST (Updated: 5 July 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தளர்வுகளின்படி மயிலாடுதுறையில் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மதுப்பிரியர் ஒருவர் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து மது வாங்கிச்சென்றார்.

மயிலாடுதுறை:-

ஊரடங்கு தளர்வுகளின்படி மயிலாடுதுறையில் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மதுப்பிரியர் ஒருவர் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து மது வாங்கிச்சென்றார். 

டாஸ்மாக் கடைகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி வழிபாட்டு தலங்கள், டாஸ்மாக் மதுக்கடைகளை நேற்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. 
ஊரடங்கு தளர்வுகளின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 102 டாஸ்மாக் மதுக்கடைகளும் நேற்று திறக்கப்பட்டன. மதுக்கடைகளில், மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியுடன் மது வாங்கி செல்ல வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. 

சூடம் ஏற்றினார்

மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஒரு மதுக்கடையில் மதுவாங்க வந்த மதுப்பிரியர் ஒருவர், சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து மகிழ்ச்சியுடன் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றார். அப்போது அவர் கூறுகையில், ‘கடந்த 2 மாதங்களாக மது குடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தேன். மதுக்கடை எப்போது திறக்கும் என்று காத்திருந்தேன். தற்போது மதுக்கடைகள் திறந்து உள்ளதால் மகிழ்ச்சியில் வேண்டுதல் நிறைவேறிய உணர்வுடன் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து மது வாங்கினேன்’ என்றார். 
மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் மயிலாடுதுறை பகுதியில் உள்ள மதுக்கடைகளில் நேற்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. 

திருவெண்காடு

சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள 26 மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மதுக்கடையின் முன்பு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. இதுகுறித்து திருவெண்காடு பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள் கூறுகையில், ‘கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மதுக்கடை திறந்த பிறகு மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று மது அருந்தி வந்தோம். கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தூரம் என்பதால் அங்கு செல்வதற்கு பெட்ரோல் செலவு ஆனது. தற்போது தமிழகத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டதால், பெட்ரோல் செலவு மிச்சமாகிறது’ என தெரிவித்தனர். மதுக்கடைகள் திறக்கப்பட்டதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story