புதிய தொழிற்சாலை தொடங்க விண்ணப்பிக்கலாம்


புதிய தொழிற்சாலை தொடங்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 5 July 2021 9:56 PM IST (Updated: 5 July 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

புதிய தொழிற்சாலை தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று தேயிலை வாரிய அதிகாரி அறிவித்து உள்ளார்.

குன்னூர்

புதிய தொழிற்சாலை தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று தேயிலை வாரிய அதிகாரி அறிவித்து உள்ளார்.

தடையை நீக்க கோரிக்கை

இந்திய தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குனர் எம்.பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- 
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை வரத்து குறைந்து இருந்ததால், புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டு இருந்தது. 

மேலும் ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதை நீக்க வேண்டும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்

இதை ஏற்று பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிக்கவும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

உத்தரவில் திருத்தம்

தற்போது நடைமுறையில் உள்ள 2003-ம் ஆண்டு தேயிலை சந்தைப்படுத்துதல் கட்டுப்பாட்டு உத்தரவு, தென்னிந்தியாவிற்காக திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை இந்திய தேயிலை வாரியம் கடந்த மே மாதம் 18-ந் தேதி வெளியிட்டது. 

அதன்படி தொழில் முனைவோரிடம் இருந்து  விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது. அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்படும். எனவே 15 கிலோ மீட்டர் சுற்றளவில் ஏற்கனவே செயல்படும் தொழிற்சாலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதா? என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

தடையில்லா சான்று

புதிய தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் உற்பத்தியை அதிகரிக்க விண்ணப்பிக்கலாம். புதிய தொழிற்சாலை தொடங்க இந்திய தேயிலை வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தேயிலை வாரிய அதிகாரிகளின் நேரடி ஆய்வுக்கு பிறகு புதிய தேயிலை தொழிற்சாலை அமைக்க தடையில்லா சான்று வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story