ஊட்டி நகராட்சிக்கு, மின்வாரியம் நோட்டீஸ்


ஊட்டி நகராட்சிக்கு, மின்வாரியம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 5 July 2021 9:56 PM IST (Updated: 5 July 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

ரூ.14 கோடி நிலுவை கட்டணத்தை செலுத்தக்கோரி ஊட்டி நகராட்சிக்கு, மின்வாரியம் நோட்டீஸ் வழங்கியது.

ஊட்டி

ரூ.14 கோடி நிலுவை கட்டணத்தை செலுத்தக்கோரி ஊட்டி நகராட்சிக்கு, மின்வாரியம் நோட்டீஸ் வழங்கியது.

கட்டணம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் வசிக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க பார்சன்ஸ்வேலி அணை முக்கியமாக உள்ளது. இந்த அணை மின்வாரிய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் எடுக்க நகராட்சி மூலம் மின்வாரியத்துக்கு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது.

நகராட்சியில் உள்ள 36 வார்டுகள் மட்டுமின்றி குன்னூர் எம்.ஆர்.சி. ராணுவ முகாமுக்கு பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

நோட்டீஸ்

கடந்த பல மாதங்களாக ஊட்டி நகராட்சி நிர்வாகம் மின்வாரியத்துக்கு கட்டணம் செலுத்தவில்லை. இதனால் மின் கட்டண பாக்கி அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் நகராட்சி மார்க்கெட்டில் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் மூலம் கிடைக்கும் வாடகை நகராட்சியின் வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

கொரோனா பரவல் காரணமாக வாடகை வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு தீ விபத்தால் 84 கடைகள் எரிந்து சேதமடைந்தன. இதனால் நகராட்சிக்கு கடும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டது.

இதற்கிடையே மின் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று ஊட்டி நகராட்சி நிர்வாகத்துக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தண்ணீர் எடுத்து வருவதால் மின் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட வில்லை.

சிறப்பு நிதி

 இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து குடிநீர் எடுத்ததற்கு ரூ.13 கோடி, தெருவிளக்குகள் மற்றும் குடிநீர் குழாய்கள் தொடர்ந்து இயங்க ரூ.1 கோடி என மொத்தம் ரூ.14 கோடி மின் கட்டணத்தை ஊட்டி நகராட்சி நிர்வாகம் பாக்கி வைத்து உள்ளது. 

இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில், நிலுவை தொகை செலுத்த அரசிடம் சிறப்பு நிதி கேட்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story