50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் இயங்கின
நீலகிரி மாவட்டத்தில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன. இதையொட்டி 50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் இயங்கின. மேலும் தங்கும் விடுதிகள், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன. இதையொட்டி 50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் இயங்கின. மேலும் தங்கும் விடுதிகள், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
புதிய தளர்வுகள்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தது. இதையொட்டி அரசு பஸ்கள் இயக்கம் தொடங்கியது.
ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புறங்கள் மற்றும் கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், சேலம், ஈரோடு, துறையூர் போன்ற வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.
அதில் 50 சதவீத பணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் சமூக இடைவெளி விட்டு இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். முதல் நாள் என்பதால் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.
270 அரசு பஸ்கள்
நீலகிரியில் 6 போக்குவரத்து பணிமனைகளில் 350 அரசு பஸ்கள் உள்ளன. 20 பஸ்கள் பிற மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வந்தது. அந்த பஸ்கள் தற்போது இயக்கப்படவில்லை. நேற்று 270 பஸ்கள் இயக்கப்பட்டன. இரவு 11 மணி வரை வெளியிடங்களுக்கு பஸ்கள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தவிர நீலகிரியில் 76 டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10 மணி முதல் திறக்கப்பட்டது. ஊட்டியில் டாஸ்மாக் கடைகள் முன்பு மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வட்டங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
சில கடைகள் காலை 11 மணிக்கு மேல் வெறிச்சோடி இருந்தது. மது வாங்க வருபவர்கள் கிருமிநாசினி தெளித்து கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மொத்தமாக மதுபானங்கள் வழங்கக்கூடாது. கடை திறப்பு நேரம் மற்றும் மூடும் நேரத்தில் கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று ஊழியர்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
ஓட்டல்கள், டீக்கடைகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தங்கும் விடுதிகள், பெரிய ஓட்டல்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு திறந்து செயல்பட்டன.
ஊட்டியில் துணிக்கடைகள், நகைக்கடைகள் திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின்னர் மக்கள் புதிய துணிகள் வாங்கவும், நகைகள் எடுக்கவும் கடைகளுக்கு வந்தனர். புதிய தளர்வுகள் அமலுக்கு வந்ததால் ஊட்டியில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து வழக்கம்போல் மாறி உள்ளது. மேலும் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
கூடலூர், பந்தலூர் தாலுகாவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் ஆட்டோ, ஜீப்புகள் உள்பட தனியார் வாகனங்கள் இயங்கியது. இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்து, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இது தவிர அனைத்து கடைகளும் திறந்து இருந்தன. அங்கு பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்தனர்.
அதிகாரிகள் கண்காணிப்பு
கோத்தகிரி, குன்னூரில் அரசு பஸ் மற்றும் தனியார் வாகன போக்குவரத்து அதிகரித்தது. மேலும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால், அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தது.
இதையொட்டி அதிகாரிகள் கடைகளில் கிருமி நாசினி வைக்கப்பட்டு உள்ளதா?, முகக்கவசம் அணிந்து உள்ளனரா?, சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணித்தனர்.
Related Tags :
Next Story