திண்டுக்கல்லில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மேற்கு மாவட்ட தலைவர் பாலு தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணை செயலாளர் சந்திரா, மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், கிழக்கு மாவட்ட செயலாளர் கஜபதி, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மதுக்கடைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அதேபோல் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜானகி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, நகர தலைவர் திலகவதி, செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்தியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதையடுத்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்த பெண்கள் அதன் முன்பு அமர்ந்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கியாஸ் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story