கோவையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு பட்டாசு வெடித்து மதுப்பிரியர்கள் கொண்டாட்டம்


கோவையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு பட்டாசு வெடித்து மதுப்பிரியர்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 5 July 2021 10:04 PM IST (Updated: 5 July 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பட்டாசு வெடித்து மதுப்பிரியர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

கோவை

கோவையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பட்டாசு வெடித்து மதுப்பிரியர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். 

கொரோனா பரவல்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மே 10-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 

தொற்று பரவல் குறைந்ததால் கோவை, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 

அதுபோன்று கேரளாவிலும் மதுக்கடைகள் திறந்தது. இதனால் கோவை மாவட்டத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் திண்டுக்கல் மற்றும் கேரளாவுக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்தனர். சிலர் அவற்றை கூடுதல் விலைக்கும் விற்றனர். 

டாஸ்மாக் கடைகள் திறப்பு 

இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து அனைத்து மாவட்டங் களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 

கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை எளிதாக நிர்வாகம் செய்யும் வகையில் கோவை வடக்கு, கோவை தெற்கு என 2-ஆக பிரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கோவை வடக்கில் 158 கடைகளும்,  தெற்கில் 135 கடைகள் என்று மொத்தம் 293 டாஸ்மாக் கடைகள் உள்ளன. 

இந்த கடைகள் அனைத்தும்  திறக்கப்பட்டன. அப்போது கடை ஊழியர்கள் தேங்காய், பழம் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம் 

இதைத்தொடர்ந்து மதுப்பிரியர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இதையடுத்து அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களுக்கு பிடித்த மதுவகைகளை வாங்கிச்சென்றனர். அப்போது அவர்கள் முகக்கவசம் அணிந்து இருந்ததுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து காத்து நின்றனர். 

மதுப்பிரியர்களின் கைகளுக்கு மது பாட்டில்கள் கிடைத்ததும் அவர்கள் ஆரவாரம் செய்தனர். ஒருசிலர் தங்களிடமிருந்த செல்போனில் மது பாட்டில்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். ஆனால் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்திற்கு மாறாக எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை.

விற்பனை குறைவு 

இதுகுறித்து டாஸ்மாக் மண்டல மேலாளர் சாதனை குறள் கூறுகை யில், கோவை மாவட்டத்தில் வழக்கமாக ஒரு நாளைக்கு ரூ.4 கோடி வரை வசூல் ஆகும். தற்போது சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர் கள் கோவைக்கு திரும்பாததால் விற்பனை குறைந்து உள்ளது. வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். 

மேலும் டாஸ்மாக் கடைகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மது பிரியர்கள் மது வாங்க வேண்டும் என்றார்.இந்த நிலையில்  ஒருவர் மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடியவாறு பஸ் நிலையத்தில் சுற்றி வந்து பஸ் ஏறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.


Next Story