போதை ஊசி கலாசாரத்தால் பாதைமாறும் இளைஞர்கள்
கோவையில் அதிகரித்து வரும் போதை ஊசி கலாசாரத்தால் இளைஞர்கள் பாதைமாறி வருகிறார்கள். எனவே பெற்றோர் விழிப்புடன் கண்காணிக்க போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
கோவை
கோவையில் அதிகரித்து வரும் போதை ஊசி கலாசாரத்தால் இளைஞர்கள் பாதைமாறி வருகிறார்கள். எனவே பெற்றோர் விழிப்புடன் கண்காணிக்க போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
போதை ஊசி
இளைஞர்கள் தங்களது இளமை பருவத்தில் நடத்தும் அட்டகாசங் களை பற்றி சிந்திக்கிறார்களே தவிர அதனால் ஏற்படும் விபரீதங்களை பற்றி அவர்கள் சிந்திப்பது இல்லை.
எதையும் அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற ஆவலும், ஆசையும் சில நேரத்தில் அவர்களை அழிவுக்கே கொண்டு செல்கிறது என்ற விபரீதத்தை அவர்கள் சிந்திப்பது இல்லை.
விளையாட்டாக செய்யும் செயல்கள் ஆபத்தில் சென்று முடிகிறது. அதில் முக்கியமான ஒன்று போதை பொருள். மது, கஞ்சா போன்றவற்றை பயன்படுத்தினால் வாசனை தெரிந்து விடும் என்பதால், இப்போது போதை மாத்திரை, போதை ஊசிக்கு அடிமையாகி பாதை மாறி வருகிறார்கள்.
கோவையில் விற்பனை அதிகம்
இதில் மிக முக்கியமானதாக இருப்பது அறுவை சிகிச்சை செய்வதற்கு வலி தெரியாமல் இருக்க போடப்படும் வலிநிவாரணி மருந்தை பயன்படுத்தி வருவது கோவையில் அதிகரித்து உள்ளது. இந்த மாத்திரை-மருந்துகள் ரூ.300 முதல் ரூ.900 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மருந்து கடையில் வேலை செய்பவர்களில் சிலரை தங்களின் கைக்குள் போட்டுக்கொண்டு அந்த மாத்திரைகளை அதிகளவில் எடுத்து அவற்றை விற்பனை செய்து வருவது தற்போது கோவையில் அதிகரித்து உள்ளது.
பாதை மாறும் இளைஞர்கள்
இந்த பழக்கம் கல்லூரி மாணவர்களிடம் இருந்து தற்போது பள்ளி மாணவர்களிடமும் பரவி உள்ளது. இதனால் அவர்கள் பாதை மாறி சென்று திருட்டு, கொள்ளை, பலாத்காரம் போன்ற சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக கோவை மாநகர பகுதியில் சாய்பாபாகாலனி, குனிய முத்தூர், போத்தனூர் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்வது அதிகரித்து உள்ளது.
இதுபோன்ற மாத்திரைகளை இளைஞர்களை தேடி விற்பனை செய்வதற்காக சில கும்பல்களும் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றன. இது குறித்து கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி சூப்பிரண்டு ரவிக்குமார் கூறியதாவது:-
மூளை செயல்திறன் பாதிப்பு
வலிநிவாரணி மாத்திரை, மருந்துகளை அறுவை சிகிச்சை செய்யும் போது வலி தெரியாமல் இருக்க பயன்படுத்தப்படும். இதை கொடுக்கப்படும் நோயாளிகளின் உடல் தன்மை பற்றி அறிந்து அந்த அளவுக்கு செலுத்தப்படும். இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.
ஆனால் அதன் அளவு தெரியாமல் போதை இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் மூளை செயல்திறன் பாதிக்கப்படுவதுடன் கல்லீரலும் பாதிக்கும். ஞாபக மறதியும் ஏற்படும். வைரஸ், எச்.ஐ.வி. போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கண்காணிக்க வேண்டும்
மேலும் இதுபோன்ற மாத்திரைக்கு அடிமையானவர்கள் வீடுகளில் தனிமையாக இருப்பார்கள். யாரிடமும் பேச மாட்டார்கள். எனவே அப்படி யாரும் இருந்தால் அவர்களை பெற்றோர் மிக கவனமாக கண்காணிக்க வேண்டும்.
அவ்வாறு கண்காணித்தால் மட்டுமே இளைஞர்களை இதுபோன்ற தீய பழக்கத்தில் இருந்து மீட்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, கோவை யில் இதுபோன்று போதை ஊசி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஏராள மான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. எனவே டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் வலி நிவாரணி மாத்திரைகைளை விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.பெற்றோர் தங்கள் குழந்தைகளை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
8 மணி நேரம் போதை
சிலர் போதை ஊசி கிடைக்காமல் மாத்திரைகளை நன்றாக கரைத்து அதை ஊசியில் ஏற்றி உடம்பில் செலுத்துகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் 8 மணி நேரம் போதை இறங்காமல் அப்படியே இருக்கும்.
கோவையில் உள்ள மருந்து கடைகளில் இதுபோன்ற மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் கொடுக்கக்கூடாது என்பதை மிக கவனமாக கண்காணித்தால் மட்டுமே போதை ஊசி நடமாட்டத்தை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story