கிறிஸ்தவ ஆலய கட்டுமான பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்


கிறிஸ்தவ ஆலய கட்டுமான பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
x
தினத்தந்தி 5 July 2021 10:38 PM IST (Updated: 5 July 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்புதெரிவித்ததால் கட்டுமான பணிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூங்கில்துறைப்பட்டு

கிறிஸ்தவ ஆலயம்

மூங்கில்துறைப்பட்டு அருகே  பொருவளூர் எல்லையில் மோடங்கல் மலை உள்ளது. இந்த மலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூங்கில்துறைப்பட்டை சேர்ந்த தனி நபர் ஒருவர் சிறிய அளவிலான கிறிஸ்தவ ஆலயத்தை கட்டி வருகிறார். இதில் ஏசுநாதர் மற்றும் மாதா ஆகிய 2 சொரூபங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.  
இந்த நிலையில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கட்டுமான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதிகாரிகள் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்து சங்கராபுரம் தாசில்தார் சையத்காதர் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் நேற்று மதியம் மோடங்கல்மலைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது வனத்துறைக்கு சொந்தமான மலையில் அனுமதியின்றி தனி நபரால் கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டு வருவது தெரியவந்தது. பின்னர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு கட்டுமான பணிகளை தொடர்ந்து அனுமதிக்கக்கூடாது என துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், வருவாய்த்துறையினருக்கும் போலீசாருக்கும் அறிவுறுத்தினார். 

தடுத்து நிறுத்தினர்

இதையடுத்து கட்டுமான பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது வருவாய் ஆய்வாளர் அண்ணாமலை, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். கிறிஸ்தவ ஆலயம் கட்டும் பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பொருவளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Next Story