மத்தூர் பகுதியில் கனமழை: புதிதாக அமைக்கப்பட்டு வரும் நாற்கர சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது-தரைமட்ட பாலம் அமைக்காததால் சேதமடைந்ததாக புகார்
மத்தூர் பகுதியில் பெய்த கனமழைக்கு புதிதாக அமைக்கப்பட்டு வரும் நாற்கர சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தரைமட்ட பாலம் அமைக்காததால் சாலை சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மத்தூர்:
நாற்கர சாலை
கிருஷ்ணகிரியில் இருந்து திண்டிவனம் வரையில் சுமார் 180 கிலோ மீட்டர் தூரம் இரு வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதனை நாற்கர சாலையாக மாற்றும் திட்டம் கடந்த 2012-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் பணிகள் முழுமை பெறவில்லை. நாற்கர சாலை பணிக்காக ஆரம்பத்தில் ரூ.612 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்த தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உயர்மட்ட மேம்பாலங்கள், ரெயில்வே மேம்பாலமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பாலங்களை அமைப்பதற்கு தற்போது, கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே திட்டம் தொடங்கி 9 ஆண்டுகள் ஆகியும் நாற்கர சாலை அமைக்கும் பணி முழுமையாக முடிக்கப்படவில்லை.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது
ஜெகதேவியில் இருந்து மத்தூர் வரை தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஓடை ஒன்று செல்கிறது. மழைக்காலத்தில் வெள்ளநீர் சாலையை கடந்து ஓடையில் கலப்பதற்கு வசதியாக தரைமட்ட பாலங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் வெள்ளநீர் சாலையை கடந்து செல்ல முடியாமல், ஒரே பகுதியில் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்தூர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து, வெள்ளமென ஓடியது. அப்போது, ஜே.ஆர்.நகர் பகுதியில் தரைமட்ட பாலம் அமைக்கப்படாத நிலையில், புதிதாக அமைக்கப்பட்டு வரும் நாற்கர சாலையை பாய்ந்தோடி வந்த வெள்ளநீர் அடித்து சென்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. போக்குவரத்து துண்டிப்பால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
தேவையான இடங்களில் பாலம்
கிருஷ்ணகிரியில் இருந்து திண்டிவனம் வரை நாற்கர சாலை அமைக்கும் பணி தொடங்கி 9 ஆண்டுகள் ஆகிறது. பல்வேறு காரணங்களால் இந்த சாலை பணி இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. மத்தூர், ஜெகதேவி பகுதிகளில் ஏராளமான சிறு மலைகள் உள்ளன. மழைக்காலத்தில் இந்த மலைகளில் இருந்து பாய்ந்தோடி வரும் வெள்ளநீர், தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஓடை வழியாக பெனுகொண்டாபுரம் ஏரிக்கு செல்வது வழக்கம். மேலும் ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கும்செல்கிறது.
இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலையில் தரைமட்ட பாலங்கள் அமைக்கப்படாத காரணத்தால், மழை நீர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும், கனமழையின் போது வெள்ளநீர் புதிய சாலையை அடித்து செல்கிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலையில் தரைமட்ட பாலங்களை தேவையான இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story