ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு: கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்-ஓட்டல்களில் 50 சதவீத பேருக்கு அனுமதி


ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு: கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்-ஓட்டல்களில் 50 சதவீத பேருக்கு அனுமதி
x
தினத்தந்தி 5 July 2021 10:47 PM IST (Updated: 5 July 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதே போல ஓட்டல்களில் 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி:
பக்தர்களுக்கு அனுமதி 
கொரோனா 2-வது அலை வேகமாக பரவியதால் தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரங்கின்போது பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கோவில்களில் பக்தர்கள் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டது. மேலும் ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. 
இந்தநிலையில் கொரோனா பரவலை பொறுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனிடையே நேற்று முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்தன. அதன்படி கோவில்களில் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அரசு அனுமதி அளித்தது.
ஓட்டல்களில் சாப்பிட அனுமதி 
சுமார் 60 நாட்களுக்கு பிறகு கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்ட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகாலையிலேயே பக்தர்கள் கோவில்களுக்கு முககவசம் அணிந்தபடி சென்று, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமியை வழிபட்டனர். கிருஷ்ணகிரியில் பெரிய மாரியம்மன் கோவில், காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில், கவீஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர். 
அதே போல ஓட்டல்களிலும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டார்கள். டீக்கடைகளிலும் வாடிக்கையாள்ர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி 
இந்தநிலையில் அனைத்து மாவட்டங்களுக்கும் நேற்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. ஓசூரில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வரும் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story