கடைசி நிமிடத்தில் உயிர்பிழைத்த குழந்தை மீண்டும் மரணத்தை தழுவிய பரிதாபம்
இறந்ததாக கூறி கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய முயன்றபோது, கடைசி நிமிடத்தில் பச்சிளங்குழந்தை உயிர்த்தெழுந்தது. அந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி நேற்று மரணத்தை தழுவியது. இந்த சம்பவம் தொடர்பாக தேனி அரசு டாக்டர்கள், நர்சுகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி:
பெண் குழந்தை
தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைகுளம் அருகே உள்ள தாசில்தார் நகரை சேர்ந்தவர் பிலவேந்திர ராஜா. கூலித்ெதாழிலாளி. இவருடைய மனைவி பாத்திமா மேரி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாத்திமாமேரி மீண்டும் கர்ப்பமானார்.
கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, கடந்த 3-ந்தேதி திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு நள்ளிரவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
உயிர் பிழைத்த அதிசயம்
பிறந்த குழந்தை உடல் அசைவின்றி இருந்தது. இதனை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். பின்னர் குழந்தையின் உடலை பிளாஸ்டிக் வாளியில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து குழந்தையின் உடலை அடக்கம் செய்வதற்காக, பெரியகுளம்-தேனி சாலையில் உள்ள கல்லறை தோட்டத்துக்கு உறவினர்கள் எடுத்து சென்றனர். அங்கு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
அப்ேபாது இறந்ததாக கூறப்பட்ட குழந்தையின் கை, கால்கள் திடீரென அசைந்தன. குழந்தை உயிர் பிழைத்த அதிசயத்தை பார்த்த பெற்றோரும், உறவினர்களும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதைத்தொடர்ந்து குழந்தையை, மீண்டும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பகல் 12 மணியளவில், அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. உயிர் பிழைத்த குழந்தை, மீண்டும் மரணத்தை தழுவியதை அறிந்து உறவினர்கள், பெற்றோர் கதறி அழுதனர்.
விசாரணை குழு
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை மீண்டும் உயிர்த்தெழுந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் டாக்டர்கள், அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த தேனி கலெக்டர் முரளிதரன் உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜிநாதன் தலைமையில், 3 பேராசிரியர்களை கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக குழந்தையின் பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
கலெக்டரிடம் அறிக்கை தாக்கல்
இதற்கிடையே சம்பவத்தன்று பிரசவ வார்டில் பணியில் இருந்த 2 டாக்டர்கள், 5 நர்சுகள், 4 ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு விசாரணை குழுவினர் நோட்டீஸ் வழங்கினர். அதன்படி, நடந்த சம்பவம் குறித்து 11 பேரும் நேற்று விளக்கம் அளித்தனர்.
அதனை அறிக்கையாக தயாரித்து, கலெக்டர் முரளிதரனிடம் அரசு மருத்துவ கல்லூரி டீன் பாலாஜிநாதன் நேற்று இரவு சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story