மானாமதுரையில், மர்ம நோய் தாக்கிய ஆடுகளை கால்நடைத்துறையினர் நேரில் ஆய்வு


மானாமதுரையில், மர்ம நோய் தாக்கிய ஆடுகளை கால்நடைத்துறையினர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 5 July 2021 11:50 PM IST (Updated: 5 July 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மானாமதுரை அருகே மர்ம நோய் தாக்கிய ஆடுகளை கால்நடைத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். சளி மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பினர்.

மானாமதுரை,

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மானாமதுரை அருகே மர்ம நோய் தாக்கிய ஆடுகளை கால்நடைத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். சளி மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பினர்.

ஆடுகள் மர்ம சாவு

மானாமதுரை அருகே சின்னகண்ணூர் ஊராட்சிக்கு உட்பட்ட புலிக்குளம் கிராமத்தில் மர்ம நோய் தாக்கியதில் 40-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்தன. இது குறித்து ‘தினத்தந்தி‘யில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது.
இந்த செய்தியை அறிந்ததும் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின்பேரில் மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குனர் சஞ்சீவி தலைமையிலான கால்நடை துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு நோய் தாக்கிய ஆடுகளை பரிசோதித்தனர். ஆடுகளின் சளி மாதிரியை சேகரித்தனர். கடந்த சில நாட்களாக மர்ம நோய் தாக்கி இறந்த ஆடுகளின் விவரத்தை கேட்டறிந்தனர். இதுவரை 147 ஆடுகள் இறந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

சளி மாதிரி சேகரிப்பு

பின்னர் இது தொடர்பாக கால்நடைத்துறை இணை இயக்குனர் சஞ்சீவி கூறியதாவது:-
புலிக்குளம் கிராமத்தில் பல்வேறு மக்களின் ஆடுகள் மர்ம நோய் தாக்குதலுக்கு ஆளாகி இறந்ததாக ‘தினத்தந்தி’யில் வெளியான செய்தியின் அடிப்படையில் கலெக்டர் உத்தரவின் பேரில் நாங்கள் இந்த கிராமத்துக்கு வந்து உள்ளோம். இங்கு நோய் தாக்கிய ஆடுகளை பரிசோதித்து சளி மாதிரிகளை எடுத்து உள்ளோம். அவற்றை ஆய்வகத்துக்கு அனுப்பி எந்த நோய் தாக்கியது என கண்டறிவோம். அது பற்றிய தகவல் ஒரு வாரத்தில் கிடைத்து விடும்.

அறிவுறுத்தல்

நோய் தாக்கிய உடன் கிராம மக்கள் தாங்களாகவே கால்நடை மருந்தகத்தை அணுகி மருந்துகள் வாங்கி ஆட்டிற்கு செலுத்தி உள்ளனர். இதனால் தான் ஆடுகள் இறப்பு அதிகரித்து உள்ளது. சளி அதிகமாகி மூக்கில் இருந்து வடிந்து ஆடுகள் சுவாசிக்க முடியாமல் இறந்து போய் உள்ளன. முதலிலேயே கால்நடைத்துறையினரிடம் தெரிவித்து இருந்தால் மற்ற ஆடுகளை நோய் தாக்குதலுக்கு முன் காப்பாற்றி இருக்கலாம். இருப்பினும் கிராம மக்களிடம் நோய் தாக்குதல் எதுவும் ஏற்பட்டால் உடனே கால்நடைத்துறையை அணுகுமாறு அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில் மானாமதுரை யூனியன் சேர்மன் லதா அண்ணாத்துரை, ஒன்றிய கவுன்சிலர் அண்ணாத்துரை, ஊராட்சி தலைவர் அங்குச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story