முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது


முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது
x
தினத்தந்தி 6 July 2021 12:01 AM IST (Updated: 6 July 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில்முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

திருப்புவனம்,

திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு உள்ள வைகை ஆற்றங்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இங்கு தர்ப்பணம் கொடுப்பது காசியை விட விசேஷம் கூடுதல் என முன்னோர்கள் கூறுவதுண்டு.
ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து திருப்புவனத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் தொடங்கியது.
இதற்காக மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து விட்டு பின்பு கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குள் வரும் பக்தர்கள் புஷ்பவனேஸ்வரர் சன்னதி வழியாக சென்று சவுந்திரநாயகி அம்மன் சன்னதி வழியாக வெளியேறும் வகையில் செய்யப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் திருப்புவனம் சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story