விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டிய கர்நாடக அரசை கண்டித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாச்சிக்குப்பம் கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி உள்ளது. இங்கு தென்பெண்ணையாற்றின் துணை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே யார்கோள் என்னும் இடத்தில் கர்நாடக அரசு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய அணையை கட்ட தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காலமான கடந்த 10 மாதங்களில் இந்த அணையை கர்நாடக அரசு, ஓசையின்றி கட்டி முடித்து விட்டது. இந்த அணையால் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து மேற்கண்ட மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்டியுள்ள அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கலிவரதன் தலைமையில் விவசாயிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக அரசு, புதியதாக அணை கட்டியுள்ளதை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
அரசின் கவனத்திற்கு
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அவர்கள் மாவட்ட கலெக்டர் மோகனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கர்நாடக அரசு, தென்பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே 50 மீட்டர் உயரமும், 430 மீட்டர் நீளமும் கொண்ட தடுப்பணையை கட்டியுள்ளதால் கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் பயிர் பாதுகாப்பு, குடிநீர் ஆதாரம், 2,000 ஏரிகள், 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் பல்வேறு ஊராட்சிகளில் லட்சக்கணக்கான குடிநீர் கிணறுகள், விவசாய கிணறுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே தமிழக அரசு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க 1892-ம் ஆண்டு மைசூர் சமஸ்தானத்திற்கும், சென்னை மாகாணத்திற்கும் தடுப்பணைகள், பாசன திட்டங்களை தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்றக்கூடாது என்ற ஒப்பந்தம் உள்ளதை நிறைவேற்றக்கோரி விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். அதன் பிறகு விவசாயிகள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story