நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
உடுமலை அருகே நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
திருப்பூர்
உடுமலை அருகே நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
தலையில் கல்லைப்போட்டு கொலை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கினர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தன் வயது 19. அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயசிம்மன் 23. இவர்கள் இருவரும் நண்பர்கள். கடந்த 9.8.2017 அன்று இரவு அரவிந்தன் வீட்டுக்கு அருகே வைத்து இருவரும் மது அருந்தியுள்ளனர்.
அப்போது அரவிந்தன், ஜெயசிம்மனின் தாயார் குறித்து தவறாக பேசியுள்ளார். இதில் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஜெயசிம்மன் கிரைண்டர் கல்லை எடுத்து அரவிந்தனின் தலையில் போட்டு கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து உடுமலை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஜெயசிம்மனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
அரவிந்தனை கொலை செய்த குற்றத்துக்காக ஜெயசிம்மனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம், தடயத்தை அழிக்க முயன்ற குற்றத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்தும் இதை ஏக காலத்தில் அனுபவிக்கவும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ரூபன் ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story