50 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்


50 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்
x
தினத்தந்தி 6 July 2021 12:29 AM IST (Updated: 6 July 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பெய்த பலத்த மழையால் 50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமாகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு வேளையில் பலத்த காற்றுடனும், இடி-மின்னலுடனும் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் அருகே காணை பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக காணை ஒன்றியம் கல்பட்டு அருகே மாரங்கியூரில் 50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது. 
வாழை மரங்கள் குலை தள்ளியிருந்த நிலையில் பலத்த காற்று, மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அவை முறிந்து விழுந்ததால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். மேலும் சில வாழை மரங்களில் வாழை குலைகள் முற்றாத நிலையில் முறிந்து கிடப்பதால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது.

இழப்பீடு

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கர் வாழை பயிரிடுவதற்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்த நிலையில் தற்போது அவை முறிந்து சேதமடைந்துள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாரங்கியூர் பகுதியில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.50 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த வாழை மரங்களை தோட்டக்கலை அதிகாரிகள் மற்றும் வேளாண்மை துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு சேத விவரங்களை கணக்கிட்டு அதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய இழப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

Next Story