கிருஷ்ணராயபுரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை
கிருஷ்ணராயபுரம் அருகே மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கிருஷ்ணராயபுரம்
கான்கிரீட் சுவர் கட்டும் பணி
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வழியாக கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் தற்போது கான்கிரீட் சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பிச்சம்பட்டி பகுதியில் சிமெண்டு கலவை தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடத்தில் இருந்து லாரிகள் மூலம் சிமெண்டு கலவை மற்றும் மண் ஆகிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை லாரி ஒன்று மணல் ஏற்றிக்கொண்டு அந்த வழியாக சென்றுள்ளது. அப்போது அந்த லாரிக்கு பின்னால் பிச்சம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (வயது 28), ராஜா (27) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
வாக்குவாதம்
அப்போது, மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடக்கோரி ஹாரன் அடித்து கொண்டே வந்தனர். பின்னர் அந்த லாரியை முந்தி சென்று அதன் டிரைவரான விருதுநகரை சேர்ந்த செந்தில் என்பவருடன் 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த பிரபாகரன், ராஜா ஆகியோருக்கு ஆதரவாக அதே ஊரைச் சேர்ந்த பிரபு (35), டிரைவர் செந்திலுக்கு ஆதரவாக சிமெண்டு கலவை கூடத்தின் மேற்பார்வையாளர் தர்மதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நாளை (நேற்று) பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்று கூறி விட்டு அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
அரிவாள் வெட்டு
இதையடுத்து தகராறு தொடர்பாக நேற்று காலை பிச்சம்பட்டி பகவதி அம்மன் கோவில் அருகே முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், பிரபாகரன், ராஜா ஆகியோருக்கு ஆதரவாக பிரபுவும், லாரி டிரைவர் செந்திலுக்கு ஆதரவாக மேற்பார்வையாளர் தர்மதுரை மற்றும் மணவாசி பகுதியை சேர்ந்த 5 வாலிபர்களும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து 2 தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அப்போது, தர்மதுரையுடன் வந்திருந்த 5 வாலிபர்களும் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், இரும்பு கம்பியால் பிரபுவின் தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டியும், தாக்கியும் உள்ளனர்.
பலி
இதில் பிரபு பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த பிரபுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரபு பரிதாபமாக இறந்தார்.
அலுவலக அறை சூறை
இதற்கிடையே பிரபு கொலை செய்யப்பட்ட தகவலறிந்த பிச்சம்பட்டியை சேர்ந்தவர்கள் கலவை தயாரிக்கும் கூடத்தில் புகுந்து அங்கு நின்றிருந்த 7 மோட்டார் சைக்கிள்கள், 2 பொக்லைன் எந்திரம், ஒரு லாரி மற்றும் அலுவலக அறையை அடித்து நொறுக்கி சூைறயாடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி. ராதிகா, கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு கீதாஞ்சலி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த கொலை சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பதற்றம்
மேலும், பிரபு, மேற்பார்வையாளர் தர்மதுரை ஆகியோர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிச்சம்பட்டி, மணவாசி ஆகிய பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story