கரூர் மாவட்டத்தில் கோவில்கள் திறப்பு


கரூர் மாவட்டத்தில் கோவில்கள் திறப்பு
x
தினத்தந்தி 6 July 2021 12:35 AM IST (Updated: 6 July 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் கோவில்கள் திறக்கப்பட்டன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்
கொரோனா பரவல்
தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு நோய்தொற்று தணிந்ததால், மாவட்டங்களை 3 வகையாக பிரித்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்தவகையில் கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கோவில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. 
கோவில்கள் திறப்பு
பக்தர்களின் தரிசனத்திற்காக கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சாமி கோவில், கரூர் மாரியம்மன் கோவில், வெண்ணைமலை முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதனையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டன. 
கிருமி நாசினி தெளிப்பு
மேலும் பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பக்தர்கள் பயப்பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் பூ, தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக கோவில்களை சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதேபோல் தேவாலயங்களும் திறக்கப்பட்டு, பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். மேலும் பள்ளிவாசல்கள் அனைத்தும் திறந்திருந்தன.

Next Story