தென்காசியில் அனைத்து வழிபாட்டு தலங்கள் திறப்பு


தென்காசியில் அனைத்து வழிபாட்டு தலங்கள் திறப்பு
x
தினத்தந்தி 6 July 2021 12:47 AM IST (Updated: 6 July 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் அனைத்து வழிபாட்டு தலங்களும் நேற்று திறக்கப்பட்டன.

தென்காசி:
தென்காசியில் அனைத்து வழிபாட்டு தலங்களும் நேற்று திறக்கப்பட்டன.

வழிபாட்டு தலங்கள்

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் நோய்த்தொற்று குறைந்த காரணத்தினால் கடைகள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி தென்காசியில் நேற்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன.

காசி விசுவநாத சுவாமி கோவில்

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் நேற்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.  கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் வாசலிலேயே கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர் வழங்கப்பட்டது. பின்னர் உள்ளே சென்று கை மற்றும் கால்களை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமூக இடைவெளியில் நிற்பதற்காக தரையில் வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. 

முககவசம் அணிந்து  பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலில் வளாகத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் நேற்று மாலை வரை சுமார் 500 பேர் மட்டுமே தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

பள்ளிவாசல்-கிறிஸ்தவ ஆலயங்கள்

இதேபோன்று தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள், தர்காக்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. அங்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

Next Story