களக்காடு மலையில் பரவிய காட்டுத்தீ அணைக்கப்பட்டது


களக்காடு மலையில் பரவிய காட்டுத்தீ அணைக்கப்பட்டது
x
தினத்தந்தி 6 July 2021 1:12 AM IST (Updated: 6 July 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு மலையில் 2 நாட்களாக எரிந்த காட்டுத்தீ அணைக்கப்பட்டது.

களக்காடு:
களக்காடு மலையில் 2 நாட்களாக எரிந்த காட்டுத்தீ அணைக்கப்பட்டது.

மலையில் தீ

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை களக்காடு வனச்்சரகம் கருங்கல் கசம் காட்டுப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும், களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு உத்தரவின்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வனச்சரகர் பாலாஜி தலைமையில் வனவர் ராம்பிரகாஷ் முன்னிலையில், களக்காடு, திருக்குறுங்குடி வனத்துைற ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட 50 பேர் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பாதிப்பு இல்லை

அதேபோல் நேற்று 2-வது நாளாக அம்பை, பாபநாசம், கடையம் வனச்சரகங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மண், கற்களை அள்ளிப்போட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘இந்த தீ விபத்தால் 2 எக்டேர் பரப்பளவுக்கும் குறைவான பகுதியில் வளர்ந்திருந்த சுக்குநாறி புற்கள் மட்டுமே கருகி உள்ளன. இதனால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை’ என்றார்.

Next Story