வழிபாட்டு தலங்கள் திறப்பு; பக்தர்கள் தரிசனம்
திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வால் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. அதேவேளையில் பூஜை பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
திருச்சி
பக்தர்களுக்கு அனுமதி
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டன. அதேவேளையில் கோவில்களை திறந்து அந்தந்த பணியாளர்கள் மட்டும் சென்று ஆகம விதிப்படி, வழக்கமான பூஜைகளை செய்து வந்தனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததால் நேற்று முதல் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க அரசு அனுமதித்துள்ளது.
ஸ்ரீரங்கம், சமயபுரம்
அதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் மற்றும் திருப்பட்டூர் பிரம்ம புரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு இந்து கோவில்கள் நேற்று திறக்கப்பட்டன. இதேபோல மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களும் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் காலை 6.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 7.30 மணிவரை, காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை, பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள், திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில், வயலூர் முருகன் கோவில், உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில், நாச்சியார் கோவில், திருச்சி ஜங்சன் வழிவிடுவேல் முருகன் கோவில், கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பூஜை பொருட்களுக்கு தடை
முன்னதாக, பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோவில் நுழைவு வாயிலில் உள்ள கிருமி நாசினியால் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்து விட்டு உள்ளே வந்தனர். சில கோவில்களில் பக்தர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் சரி பார்க்கப்பட்டது.
பூ, பழம், மாலை, கற்பூரம், ஊதிபத்தி உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. சாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். விபூதி, குங்குமம் ஆகியவை பிரசாத தட்டில் வைக்கப்பட்டு அதை பக்தர்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
கிறிஸ்தவ ஆலயம், மசூதி
இதேபோல, திருச்சி மேலப்புதூரில் உள்ள தூய மரியன்னை பேராலயம், சகாய மாதா பசிலிக்கா, மெயின்கார்டுகேட் புனித லூர்து அன்னை ஆலயம், புத்தூர் பாத்திமா அன்னை ஆலயம், கே.கே.நகர் ஜெகன்மாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று காலைமுதல் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல நத்தர்வலி தர்கா நேற்று முதல் தொழுகைக்காக திறக்கப்பட்டது. இதன் காரணமாக துவா செய்வதற்கு முஸ்லிம்கள் அங்கு வந்தனர். மேலும் அனைத்து பள்ளிவாசல்களும் திறக்கப்பட்டு தொழுகை நடைபெற்றது.
லால்குடி
லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோவில் நேற்று திறக்கப்பட்டது. இதனையொட்டி பக்தர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு மூலவரை தரிசித்தனர்.
துறையூர்-மணப்பாறை
துறையூரில் உள்ள நந்திகேஸ்வரர் கோவில் மற்றும் பெருமாள் மலை ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவில் மற்றும் துறையூர் சத்திய நாராயணர் கோவில் ஆகிய கோவில்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை துறையூர் பெருமாள் மலை கோவில் நிர்வாக அதிகாரி யுவராஜ் செய்திருந்தார். தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் நேற்று காலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
மணப்பாறையில் பிரசித்தி பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர்.
முசிறி
முசிறி சந்திர மவுலீஸ்வரர், வெள்ளூர் திருக்காமேஸ்வரர், தா.பேட்டை காசி விஸ்வநாதர் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் நேற்று திறக்கப்பட்டன.
Related Tags :
Next Story