பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமைக் கழக அறிவிப்பின்படி, பெட்ரோல்- டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்டுமானப் பொருட்களின் விலைவாசி உயர்வை திரும்ப பெறக்கோரியும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் கைவிட வலியுறுத்தியும், கொரோனா காலகட்டத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மத்திய-மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருச்சி மாநகர் மாவட்டம், தெற்கு மாவட்டம், வடக்கு மாவட்ட மற்றும் பேரூர், ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது விஜய பிரபாகரன் பேசியதாவது:-இன்று அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த கொரோனா காலத்தில் யாராலும் வெளியில் வர முடியவில்லை. மக்கள் பிரச்சினைகள் குறித்து கேட்க முடியவில்லை. மக்களுக்காக குரல் கொடுக்க முடியவில்லை. எந்த கட்சியாலும் மக்கள் பிரச்சினைகளை பேச முடியாது. தே.மு.தி.க. மட்டுமே தாமாக முன் வந்து மக்கள் பிரச்சினைகளை பேசுகிறது. கஜானா காலி எனக்கூறும் தி.மு.க. அரசு கடந்த ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தவரை ஏன் கேள்வி கேட்வில்லை. கொரோனாவால் ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள்.
ஆர்ப்பாட்டம் நடத்தி மத்திய, மாநில அரசுகளை திட்டுவது எங்களது நோக்கமில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்திற்கு வரக்கூடாது என குரல் கொடுத்தவர் விஜயகாந்த். தஞ்சையில் இத்திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர். விஜயகாந்த் மிகவும் நன்றாக உள்ளார். தமிழகத்தில் தே.மு.தி.க. வீழ்ந்து விட்டது என யாரும் நினைக்க வேண்டாம். ஒவ்வொரு கிராமமாக நான் சென்று நிச்சயம் நமது கட்சியை பழைய நிலைக்கு கொண்டு வருவேன். இதற்காக உயிரையும் கொடுப்பேன். நிச்சயம், விஜயகாந்த் கனவு ஒருநாள் நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோர்ட்டு ஆணையிட்டுள்ளது. தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் போது தே.மு.தி.க.வின் நிலைப்பாட்டினை கட்சி தலைமை அறிவிக்கும் என்றார்.
Related Tags :
Next Story