போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை


போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 6 July 2021 1:44 AM IST (Updated: 6 July 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

திங்கள்சந்தையில் திருமாவளவன் பிறந்த நாள் சுவர் விளம்பரம் அழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இரணியல் போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திங்கள்சந்தை, 
திங்கள்சந்தையில் திருமாவளவன் பிறந்த நாள் சுவர் விளம்பரம் அழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இரணியல் போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுவர் விளம்பரம் அழிப்பு 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி திங்கள்சந்தை குருந்தன்கோடு பகுதியில் சுவரில் வாழ்த்து விளம்பரம் எழுதப்பட்டிருந்தது. இதனை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் அழித்ததாக தெரிகிறது. இதையடுத்து பா.ஜனதா கட்சியினர் அழித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இரணியல் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த அமர்நாத் பிரபாகர், கார்த்திக் மற்றும் 2 பேர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் இரணியல் போலீஸ் நிலையம் அருகே கூடினர். இதனால் போலீஸ் நிலையம் முன்பு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்த உதவி துணை சூப்பிரண்டு ஈஸ்வரன் சம்பவ இடம் சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது பா.ஜனதா சார்பில் போலீசில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
போக்குவரத்து பாதிப்பு
இதற்கிடையே சுவர் விளம்பரம் அழிக்கப்பட்ட இரணியல் ஆற்றுப்பாலத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு போக்குவரத்து சீரானது. இந்த சம்வத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story