பச்சிளம் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பெற்றோர் கைது


பச்சிளம் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பெற்றோர் கைது
x
தினத்தந்தி 6 July 2021 2:04 AM IST (Updated: 6 July 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிக்பள்ளாப்பூர்: சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பச்சிளம் குழந்தை கொலை

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி டவுனில் தாலுகா அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டு கழிவறையில் பிறந்த சிறிது நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை தூக்கில் தொங்கியது. அந்த குழந்தையை மீட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் குழந்தை இறந்தது.

இந்த சம்பவம் குறித்து சிந்தாமணி டவுன் போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை யாரோ தூக்கில் தொங்கவிட்டு கொன்றது தெரிந்தது. இதுகுறித்து சிந்தாமணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரித்தனர்.

பெற்றோர் கைது

இந்த நிலையில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து சந்தேகத்தின்பேரில் ஒரு பெண், ஒரு ஆணை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா சேலூரை சேர்ந்த வேணுகோபால், அவரது மனைவி மம்தா என்பதும், தனக்கு பிறந்த குழந்தையை மம்தாவே தூக்கில் தொங்கவிட்டு கொன்றதும் தெரிந்தது. இதனால் வேணுகோபால், மம்தாவை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

அதாவது வேணுகோபால், மம்தா தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளான். கணவன்-மனைவி 2 பேரும் பெங்களூருவில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தனர். இதற்கிடையே மம்தா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். ஆனால் தான் கர்ப்பம் ஆனது குறித்து கணவர் வேணுகோபாலிடம் கூட தெரிவிக்காமல் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த மம்தா, தான் கர்ப்பமாக இருப்பது பற்றி வேணுகோபாலிடம் கூறி உள்ளார்.

வளர்க்க முடியாது என்பதால்...

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 2 பேரும் வேலை இழந்தனர். பின்னர் சேலூருக்கு சென்று உள்ளனர். கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி 2 பேரும் தவித்து உள்ளனர். இதற்கிடையே இன்னொரு குழந்தை நமக்கு வேண்டாம் என்று மம்தாவிடம், வேணுகோபால் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வேணுகோபாலும், மம்தாவும் சேலூரில் இருந்து பஸ் மூலம் சிந்தாமணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து உள்ளனர்.

அப்போது மம்தாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரிக்குள் மம்தாவும், வேணுகோபாலும் சென்றனர். பின்னர் கழிவறைக்குள் சென்ற மம்தா அங்கு வைத்து குழந்தை பெற்று உள்ளார். பின்னர் அந்த குழந்தையை வளர்க்க முடியாது என்பதால் கழிவறை ஜன்னலில் தூக்கில் தொங்கவிட்டு உள்ளார். 

தீவிர விசாரணை

பின்னர் வெளியே வந்து வேணுகோபாலிடம் சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதன்பின்னர் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இருப்பினும் குழந்தை கொலைக்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 
மேற்கண்ட தகவலை சிக்பள்ளாப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி நிருபர்களிடம் கூறினார்.

Next Story