சுமலதா எம்.பி. குறித்து குமாரசாமி சர்ச்சை பேச்சு


சுமலதா எம்.பி. குறித்து குமாரசாமி சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 6 July 2021 2:14 AM IST (Updated: 6 July 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

கே.ஆர்.எஸ். அணை விரிசல் விவகாரத்தில் சுமலதா எம்.பி. குறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார். இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ள சுமலதா மன்னிப்பு கேட்கும்படி வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூரு: கே.ஆர்.எஸ். அணை விரிசல் விவகாரத்தில் சுமலதா எம்.பி. குறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார். இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ள சுமலதா மன்னிப்பு கேட்கும்படி வலியுறுத்தி உள்ளார்.

குமாரசாமி சர்ச்சை பேச்சு

மண்டியாவில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் நடைபெறுவதால் கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும், எனவே சட்டவிரோத கல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சுமலதா எம்.பி. தெரிவித்திருந்தார். இதுகுறித்து பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து பேசிய குமாரசாமி, சுமலதா பற்றி சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக கருத்து சொல்லி இருந்தார். 

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட சுமலதா, நடிகர் அம்பரீஷ் உயிர் இழந்திருந்ததால், அந்த அனுதாப அலையில் வெற்றி பெற்றிருந்தாகவும், எம்.பி.யாக இருந்தாலும் மக்களுக்கு சுமலதா எந்த நன்மையும் செய்யவில்லை, அடுத்த தேர்தலில் சுமலதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் குமாரசாமி கூறி இருந்தார். இதுகுறித்து நடிகையும், எம்.பி.யுமான சுமலதா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நாகரீகமாக பேசக்கூட தெரியவில்லை

முன்னாள் முதல்-மந்திரியாக 2 முறை பதவி வகித்துள்ள குமாரசாமிக்கு, ஒரு பெண்ணை பற்றி எப்படி பேச வேண்டும் என்று தெரியவில்லை. முதல்-மந்திரியாக இருந்த ஒருவருக்கு நாகரீகமாக பேசக்கூட தெரியவில்லை. அவரது மட்டத்திற்கு நான் வந்து பேச விரும்பவில்லை. அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மண்டியா தேர்தலில், குமாரசாமியின் மகன் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் குமாரசாமிக்கு மண்டியா மக்கள் தக்க பாடம் புகட்டி இருந்தார்கள்.

தேர்தல் தோல்வியை குமாரசாமியால் சகித்து கொள்ள முடியவில்லை. அதனால் தேர்தல் தோல்வியை மனதில் வைத்து கொண்டு வாய்க்கு வந்ததை அவர் பேசுகிறார். நான் அனுதாபத்தில் வெற்றி பெற்றிருப்பதாக கூறி இருப்பது சரியா?. கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் ஏற்பட்டு இருப்பது குறித்து எனக்கு கிடைத்த தகவல்களை தெரிவித்திருந்தேன். கே.ஆர்.எஸ். அணையை பாதுகாக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமாகும். கே.ஆர்.எஸ். அணையை பாதுகாப்பது குறித்து நாடாளுமன்றத்தில் கூட பேசி இருக்கிறேன்.

பாடம் புகட்டினார்கள்

மத்திய ஜல்சக்தி துறை மந்திரியை சந்தித்தும் கே.ஆர்.எஸ். அணை விவகாரம் குறித்து பேசி இருக்கிறேன். கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் ஏற்படவில்லை என்றால், இதற்கு முன்பு நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்த டி.கே.சிவக்குமார், அணையை பாதுகாக்க நிதி ஒதுக்கியது ஏன்?. தேர்தல் தோல்வியை மனதில் வைத்து கொண்டு நான் பேசுவதற்கு எல்லாம் எதிராக குமாரசாமி பேசி வருகிறார். ஒரு பெண்ணான என்னை பற்றி குமாரசாமி தரக்குறைவாக பேசி இருப்பது அழகு அல்ல.

மண்டியா தொகுதி எம்.பி.யாக மண்டியா மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறேன். என்னை யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காக உழைக்கவில்லை. மண்டியா தொகுதி மக்களுக்கு நான் வேலை செய்வது தெரிந்தால் போதும். மண்டியாவுக்கு யார் தேவை என்று நாடாளுமன்ற தேர்தலில் மக்களே நல்ல முடிவு எடுத்து குமாரசாமிக்கு பாடம் புகட்டினார்கள். அதனை குமாரசாமி மறந்து விடக்கூடாது.
இவ்வாறு சுமலதா எம்.பி. கூறினார்.

தவறாக புரிந்து...

இதற்கிடையில், சுமலதா எம்.பி. குறித்து சர்ச்சைக்குரிய விதமாக தான் பேசவில்லை என்றும், நான் கூறிய கருத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்றும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும் மண்டியா தேர்தலின் போது சுமலதா பேசிய ஆடியோ ஆதாரங்களை வெளியிடுவேன் என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள சுமலதா, என்னை பற்றி எந்த விதமான வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் இருந்தாலும் குமாரசாமி வெளியிடலாம். தேர்தலின் போது மக்கள் குமாரசாமிக்கு பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.

Next Story