சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடத்த தடை கலெக்டர் அதிரடி உத்தரவு
சிதம்பரம் நடராஜா் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடத்த தடை விதித்து கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்,
ஆனி திருமஞ்சன விழா
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்தது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக கோவில்களில் திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
கலெக்டருடன் தீட்சிதர்கள் சந்திப்பு
இருப்பினும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தீட்சிதர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்படி கோவிலில் திருவிழா நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்கள் நேற்று மாலை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்தனர். அப்போது தீட்சிதர்கள், நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா மற்றும் தேரோட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
திருவிழா நடத்த தடை
இதைக்கேட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில்களில் திருவிழா, கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது. ஆகவே நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா நடத்த தடை விதிக்கப்படுகிறது. ஆனால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடத்தலாம், சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கலாம் என்று கூறினார்.
அதற்கு தீட்சிதர்கள், இது தொடர்பாக மற்ற தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதாக கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ், சப்-கலெக்டர் மதுபாலன் ஆகியோர் உடனிருந்தனா்.
Related Tags :
Next Story